வாஷிங்டன்: தமிழகத்தில் பிறந்தவரான ரினி சம்பத், 31, அமெரிக்காவின் வாஷிங்டனின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மேயர் பதவிக்கு, வரும் நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன், வரும் ஜூன் மாதத்தில், கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பிறந்தவரான ரினி சம்பத் போட்டியிட இருக்கிறார். ரினி 7 வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.
அதன்பின் அங்கேயே வளர்ந்த அவர், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் தேசிய கல்லுாரி தலைமை கவுன்சிலில் கொள்கை இயக்கு நராக பணியாற்றியவர்.
பின்னர், அமெரிக்க அரசு நிறுவனங் களுக்கு சேவை செய்யும் முன்னணி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக ரினி சம்பத் பணியாற்றினார்.
ஜனநாயக கட்சி சார்பில் மேயர் வேட்பாளருக்கான போட்டியில் ரினி சம்பத் பங்கேற்கிறார். இதற்கு தேவையான கட்சியின் 4,500 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.
அந்த வகையில், வாஷிங்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்திருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக, மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியினரே வென்றுள்ளனர்.
