திருச்சி: ”பா.ஜ.,- அ.தி.மு.க., சந்தர்ப்பவாத கூட்டணி,” என தி.மு.க., – எம்.பி., கனிமொழி விமர்சித்து உள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில், தி.மு.க., கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தி.மு.க., கூட்டணி, கொள்கை அடிப்படையில் உருவானது. ஆனால், பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, பொருத்தமில்லாத கூட்டணி. தேர்தலுக்கு தேர்தல் மாறும் கூட்டணி.
மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும், அ.தி.மு.க., ஏற்றது; ஹிந்தி திணிப்பை பழனிசாமி எதிர்க்கவில்லை. பழனிசாமி தன்னை காப்பாற்றிக்கொள்ள பா .ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார்.
மக்களை தனித்தனியாக பிரித்து, ஜாதி, மதம் என்று மோத வைத்து, அதில் குளிர்காய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்., கலாச்சாரத்துக்கும், நமது கருத்தியலுக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல்.
மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளை கட்டுப்படுத்தி, முடக்கும் விதமாக, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து, இம்மியளவும் பழனிசாமி குரல் கொடுத்ததில்லை.
அ.தி.மு.க., முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. தற்போது, தி.மு.க.,வை காப்பியடித்து, தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க., கொடுத்துள்ளது.
தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு உரிமைத்தொகை உயர்வு, பெண்களுக்கு 8,000 ரூபாய் கூப்பன் உட்பட, பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. அதை நிறைவேற்ற, தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
