சென்னை: ”என் மீது கோபப்பட்டு பலனில்லை; ராஜா மீது கோபத்தை காட்டுங்கள்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
ஆரணி தொகுதியில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் பழனிசாமி பேசியதாவது:
நெல்லையில் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக, பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்’ என கோபத்தை கக்கியுள்ளார். கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள்; தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜாவிடம் காட்டுங்கள்.
அவர் தான், ஆடியோவில் ஒரு செய்தி சொன்னார். அது, இந்திய அளவில் பரவி வருகிறது. அதைத்தான் நான் சொன்னேன். ராஜா மீது கோபப்பட்டால் உண்மையை சொல்லி விடுவார் என்பதால் பயம்.
ராஜா உண்மையை சொன்னால், இருக்கும் இடம் வேறாக மாறி விடும். ஸ்டாலின் பேச பேச அது உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
‘ஸ்டாலினை ஆளாக்கி, அவரை எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர், செயல் தலைவர் ஆக்கினார் கருணாநிதி. ஆனால், தந்தையையே வீட்டுச் சிறையில் ஸ்டாலின் வைத்துள்ளார்’ என ராஜா சொல்கிறார்; ஸ்டாலினின் அண்ணன் அழகிரியும் சொன்னார்.
ஜெயலலிதா இறந்தபோது, அவரது மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இப்போது நான் சொல்கிறேன். கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள், சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார். அவர், 15 கோடி ரூபாயில் கட்டிய பாலம் தண்ணீரில் போய் விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இது குறித்து விசாரணை நடத்தப்படும்.
கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டதாகவும், அதை நான் மறுத்து விட்டதாகவும் ஸ்டாலின் என் மீது களங்கம் கற்பித்திருக்கிறார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி இறந்தார். எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே இடம் கேட்டபோது, ‘முதல்வராக இறந்தால் தான் இடம் கிடைக்கும்’ என்று கருணாநிதி அப்போது சொன்னார்.
காமராஜர் இறந்தபோதும், முதல்வர் பதவியில் இல்லாததால், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனுமதிக்கவில்லை.
அதனால் தான், கருணாநிதி எடுத்த முடிவையே நானும் எடுத்து, கிண்டியில் 2 ஏக்கர் நிலம் கொடுத்தேன். அதை மறுத்து நீதிமன்றம் சென்றனர். இந்த உண்மையை மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
