காங்., வேட்பாளரை மாற்ற காந்தி சிலையிடம் முறையீடு

ஈரோடு: வேட்பாளரை மாற்றக்கோரி, காங்., கட்சியினர் காந்தி சிலையிடம் முறையிடும் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் கோபிநாத்தை மாற்ற, ஈரோடு மாவட்ட காங்., நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலையிடம் இதற்காக முறையிட முடிவு செய்தனர். இதற்காக, நேற்று காலை, 10:15 மணிக்கு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், முன்னாள் தலைவர் ரவி உட்பட, 40க்கும் மேற்பட்டோர் கூடினர். அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், போலீசார், ‘தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. முறையாக அனுமதி பெற்று வந்து மாலையிடவோ, மனு வழங்கவோ செய்யலாம்.

மீறினால் வழக்குப்பதிவு செய்வோம்’ என்றனர். வழக்கு பதிவு செய்து கொள்ளும்படி கூறி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, வேட்பாளரை மாற்றக்கோரி சிலையிடம் முறையிட்டனர். மக்கள்ராஜன் கூறுகையில், ”திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவருக்கு ஈரோட்டில் வாய்ப்பு தந்திருப்பது அதிருப்தி தருகிறது. அவரை மாற்ற கட்சி தலைமைக்கு கடிதம், மெயில் அனுப்பி உள்ளோம்.

மாற்ற மறுத்தால், எதிர்த்து வேறு ஒரு நபரை நிறுத்துவோம். எங்கள் உணர்வுகளை கட்சி தலைமைக்கு தெரிவிக்கும் வகையில், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்,” என்றார்.

தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள, கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில், போராட்டத்துக்கு அனுமதி கோரி, மக்கள்ராஜன் மனு வழங்கினார்.

Source link