தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கிய அவர், தற்போது அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டப் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் புதுச்சேரியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்வின் மூலம் புதுச்சேரியைச் சார்ந்த தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் திமுக தலைமைக்கழகம் மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதில் திட்டக்குடி, விருத்தாசலம், குறிச்சிப்பாடி, பன்ருட்டி, கடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதி மக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 8ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீர்காழி மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட தொகுதிகளுக்கான பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விழுப்புரம், வானூர் திண்டிவனம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
இதனையடுத்து பயணத்தின் தொடர்ச்சியாக ஏப்ரல் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை செய்கிறார். 3ஆம் கட்ட பிரச்சாரத்தின் இறுதியாக அன்று (09.04.2026) மாலை 5 மணிக்கு மறைமலைநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமோரூர், தாம்பரம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையுடன் நிறைவு செய்கிறார்.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணங்கள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய திமுக தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டபடி பரப்புரை இடங்களுக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி வழியில் தொண்டர்கள் எவ்வித வரவேற்பு நிகழ்ச்சிகளையோ, கூடுதல் நிகழ்வுகளையோ ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பரப்புரைப் பயணத்தின் போது கட்சி முன்னணியினர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தலைவர் தங்கியிருக்கும் இடத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, நேரடியாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளனர். பயண நேரத்தைக் குறைத்து திட்டமிட்டபடி கூட்டங்களை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
