ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் ஆட்டம், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்தது.
தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், ” இந்த ஆடுகளத்தில் ராஜஸ்தான் போன்ற ஒரு வலுவான அணியை 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களது பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றி.
பேட்டிங்கிலும் எங்களது தொடக்க வீரர்கள் மிகச்சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால், 12 மற்றும் 13-வது ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் எங்களை ஆட்டத்திலிருந்து பின்னுக்குத் தள்ளிவிட்டது. அந்த நேரத்தில் மட்டும் விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால், இந்த இலக்கை எட்டுவது எங்களுக்குக் கடினமாக இருந்திருக்காது.
ஓவருக்கு 9 அல்லது 10 ரன்கள் எடுப்பது என்பது பெரிய விஷயமல்ல, பவுண்டரிகளும் எளிதாக வந்தன. ஆனால் விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்ததால் ஆட்டத்தின் வேகத்தை எங்களால் தக்கவைக்க முடியவில்லை.
ஸ்கோர் போர்டைப் பார்த்தாலே ஆட்டத்தின் தேவை என்ன என்பது தெரிந்துவிடும். இருப்பினும், இது தொடரின் ஆரம்பம்தான், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்னும் வலிமையாகத் திரும்புவோம்.

கடைசி ஓவரைப் பொறுத்தவரை, ஒரு பவுண்டரி அடித்தால் போதும் என்பதே எங்கள் திட்டமாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டே மிகச்சிறந்த யார்க்கர்களை வீசினார். ஆனால், அவர் லெந்த் தவறி வீசிய அந்த ஒரு பந்தை நான் சிக்ஸருக்கு அடித்திருக்க வேண்டும், அது முடியாமல் போனது வருத்தமே.
சுப்மன் கில் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது, அடுத்த போட்டிக்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன்,” என்று பேசியிருக்கிறார்.
