“விஜய், ஜோசப் விஜய்யாக மாறியுள்ளார்” – தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பேட்டி!

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனையொட்டு தவெக தலைவர் விஜய் கடந்த 2ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

இந்நிலையில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று (04.04.2026) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பாலகரைப் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் – 2 அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தனது வேட்பு மனுவை இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி எம்பி துரை வைகோ, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், திமுக கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “கிழக்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நல்லது மற்றும் துக்க நிகழ்வுகளில் நின்று அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டுள்ளேன். நான் எவ்வாறாகச் செயல்பட்டேன் என்று மக்களுக்குத் தெரியும். ஆகையால் மற்றவர்களின் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திருச்சி காந்தி மார்க்கெட் எந்த சூழ்நிலையிலும் இடம் மாற்றக்கூடாது என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூறியுள்ளேன். நிச்சயம் அதற்கான நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டு உள்ளார். மேலும் வருகின்ற தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார். 

அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என, கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறினார். விஜய் தற்பொழுது ஜோசப் விஜய் என குறிப்பிடுகிறார் என்ற கேள்விக்கு, நான் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நிற்கிறேன். சிறு வயதிலிருந்து மதக்கட்டுப்பாட்டுகளுக்கு இருந்து கிறிஸ்தவராக இருக்கிறேன். தற்பொழுது பொதுவானவனாக இருந்து அனைவரும் அரவணைத்துச் செல்கிறேன். நான் கிறிஸ்தவன் திடீரென்று மாறவில்லை. விஜய் தான் இப்போது ஜோசப் விஜய்யாக மாறியுள்ளார் என்றார்.

Source link