சென்னை: ஏப்ரல் 16ம் தேதியே பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டுவதற்கு இவ்வளவு அவசரம் ஏன்? ஏப்ரல் 29ல் பார்லிமென்ட் கூட்டம் நடத்த முடியாததற்கான காரணம் என்ன? என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்க உள்ள சூழலில் ஏப்ரல் 16-18 தேதிகளில் பார்லிமென்ட் கூட்டத்தொடரை கூட்டுவது உள்நோக்கம் உடையது. இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 29ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபாவில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் 39 பேரும், மேற்குவங்கத்தை சேர்ந்த எம்பிக்கள் 28 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர். ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான நாட்களில், இவர்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பார்கள்.
அந்த நாட்களில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான மிக முக்கியமான மசோதாக்கள் விவாதத்திற்கும், வாக்கெடுப்பிற்கும் கொண்டுவரப்பட்டால், லோக்சபாவில் உள்ள இந்த 67 எம்பிக்கள் அதில் எவ்வாறு பங்கேற்று வாக்களிக்க இயலும்? இந்த எம்பிக்களை பார்லிமென்ட் நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைப்பதே இதன் உள்நோக்கம் என்று நான் சந்தேகிக்கிறேன். லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை 816ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள திட்டம் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும்.
இது, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கும், தங்கள் மக்கள் தொகையைச் சீராகக் கட்டுக்குள் வைத்துள்ள தென் மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்தும். ஏப்ரல் 16 முதல் 18 வரை பார்லிமென்டை கூட்டுவதற்கான அரசின் நடவடிக்கையை மல்லிகார்ஜுன் கார்கே எதிர்த்துள்ளதுடன், அதற்கு மாற்றாக ஏப்ரல் 29ம் தேதியை அவர் பரிந்துரைத்துள்ளார். ஏப்ரல் 16ம் தேதியே பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டுவதற்கு இவ்வளவு அவசரம் ஏன்? ஏப்ரல் 29ல் பார்லிமென்ட் கூட்டம் நடத்த முடியாததற்கான காரணம் என்ன? இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.
