புதுடில்லி: பால் திருடும் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்மேற்கு டில்லி உத்தம் நகரில் சிலர், பால் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, போலீசார்
300-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். உளவுத்துறையின் உதவியுடன் தகவல்களை சேகரித்தனர். விகாஸ் நகர் தேவாலயம் அருகே தனிப்படை போலீசார் 3-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். ஒரு ஆட்டோவில் இருந்த, 14 காலி பால் பெட்டிகள் குறித்து விசாரித்தனர். அதில் இருந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். கிடுக்கிப்ப்டி விசாரணை நடத்தியதில், பால் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதையும், ரோஹிணி பிரேம் நகரில் ஆட்டோவை திருடி வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.
ரன்ஹோலாவைச் சேர்ந்த மோகித் என்ற பதா,27, மற்றும் ஆயுஷ்மான் பாண்டே என்ற பண்டிட்,19, ஆகிய இருவரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
பால் வினியோக மையங்களுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பால் பொருட்களைத் இருவரும் திருடி, தாப்ரி மற்றும் பிந்தாபூரில் விற்பனை செய்து வந்துள்ளனர். இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில், திலக் நகர் மற்றும் ரன்ஹோலாவில் திருடிய ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஒரு பைக் கைப்பற்றப்பட்டன மோஹித் மீது திருட்டு, வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டு தொடர்பான 38 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
