“பொறுத்திருங்கள், பெட்டியைத் திறக்கட்டும்…” – விஜய்க்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் – சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அண்மையில் புதுச்சேரியின் தட்டாச்சாவடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், திமுக – காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டிலும் திமுக காங்கிரஸ் குழப்ப அணியாகத் தான் இருக்கிறது. புதுச்சேரியிலும் அதே மாதிரி குழம்பிப் போன அணியாகத் தான் இருக்கிறது” என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் விஜய்யின் விமர்சனத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகையிடம் விஜய்யின் விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள், பொட்டியை திறக்கட்டும். மக்கள் என்ன முடிவு சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். மக்களுக்கு எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு, ஒரு கட்சியை குறை சொல்வது எந்த விதத்தில் சரி? 24 மணி நேரமும் முதலமைச்சர் உழைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைத்து தோழமைக் கட்சிகளும் உழைப்பு, உழைப்பு என்று மக்களோடு மக்களாக சேர்ந்து நல்லது கெட்டது என அனைத்திலும் பங்கேற்கிறார்கள்

எஸ்.ஐ.ஆர் ஆகட்டும், கொரோனா ஆகட்டும், வெள்ளம் ஆகட்டும், வறட்சி ஆகட்டும் எல்லாவற்றிலும் மக்களோடு மக்களாக நிற்கிறோம். எதிலுமே பங்குகொள்ளாமல் எந்த ஒரு உழைப்பையும் போடாமல் கட்சிகளை குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். 

Source link