தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வந்தது.
இந்த பரபரப்பான சூழலில், கடந்த 3ஆம் தேதி முதற்கட்டமாக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. அதிலும் மீதமுள்ள மதுரை மேலூர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் எம்.பியின் ஆதரவாளருக்கு சீட்டு கொடுப்பதா? ப.சிதம்பரம் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரன் அம்பலம் மகன் ரவிச்சந்திரனுக்கு சீட்டு கொடுப்பதா? என்ற பஞ்சாயத்தில் அந்த தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருப்பதாகக் கூறப்பட்டது.
வேட்புமனு செய்ய நாளை (06-04-26) ஒரு நாள் மட்டுமே உள்ள இந்த சூழலில் மேலூர் தொகுதியில் போட்டியிடும் 28வது வேட்பாளரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (05-04-26) அறிவித்துள்ளார். அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த நிர்வாகி விஸ்வநாதன் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராக இருக்கும் விஸ்வநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவர், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அவர் மேலூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு செய்ய நாளை ஒரு நாள் மட்டுமே உளா சூழலில், நாளைய தினம் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
