ஜூஸ் போட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்; கொளுத்தும் வெயிலில் நடந்த சுவாரஸ்யம்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் – சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (06-04-26) ஒரு நாள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளா நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும், வித்தியாசமான முறையிலும் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், பல்லாவரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் சலவை தொழிலாளர் கடைக்குச் சென்று சட்டைக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், திமுக சார்பாக செய்யாறு தொகுதியில் போட்டியிடும் ஜோதி என்பவர் கொளுத்தும் வெயிலில் ஜூஸ் போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேட்பாளராக தன்னை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து ஜோதி, செய்யாறு தொகுதி முழுவதும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று சக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது ஒரு கடைக்குச் சென்ற ஜோதி, அங்கு ஜூஸ் போட்டு பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தார். 

Source link