டிரம்ப்பின் முந்தைய ஆட்சியின்போது வெள்ளை மாளிகையில் செல்வாக்கு பெற எப்ஸ்டீன் உதவியை நாடிய அனில் அம்பானி

இந்நிலையில் 2017-2019 காலகட்டத்தில் டிரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்க அரசுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை வலுப்படுத்த எப்ஸ்டீனின் உதவியை அனில் அம்பானி நாடியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் அம்பானி மற்றும் எப்ஸ்டீன் இருவரும் ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் உரையாடியுள்ளனர்.

இதில் அனில் அம்பானி ‘Armani A’ என்ற பெயரில் தனது அடையாளத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு உரையாடலில் “இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வெள்ளை மாளிகை தொடர்பான விவகாரங்களில் உங்கள் வழிகாட்டுதல் தேவை” என அனில் அம்பானி கோரியதற்கு, தான் “உள்விவகாரத் தகவல்களை” வழங்குவதாக எப்ஸ்டீன் பதில் அளித்துள்ளார்.

2017ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக டேவிட் பெட்ரியஸ் நியமிக்கப்படுவாரா என அனில் அம்பானி கேட்டதற்கு, அந்தப் பரிசீலனை இல்லை என எப்ஸ்டீன் முன்கூட்டியே தெரிவித்துள்ளார். பின்னர் கென்னத் ஜஸ்டர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2019ம் ஆண்டு அனில் அம்பானியின் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது, எப்ஸ்டீன் அவருக்குத் தொடர்ந்து ஆறுதல் செய்திகளை அனுப்பியுள்ளார்.

“நான் ஒரு நண்பனாக மட்டுமே ஆலோசனை கூறுகிறேன், எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

2019, மே 23 அன்று மான்ஹாட்டனில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் அனில் அம்பானி அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு நடந்த இரண்டு மாதங்களிலேயே மைனர் பெண்களைக் கடத்திய வழக்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.

வெள்ளை மாளிகையில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அனில் அம்பானிக்கு எப்ஸ்டீன் உதவ முயன்றதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க அனில் அம்பானி தரப்பு மறுத்துவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Source link