புதுடில்லி:கேரளா, அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளையுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைகிறது. இதையடுத்து, இங்கு இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துடன் சேர்த்து கேரளா, வடகிழக்கு மாநிலமான அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்கம் என ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 15ல் தேர்தல் தேதிகளை அறிவித்தது. இதில் தமிழத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்., 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநிலத்திற்கு ஏப்., 23 மற்றும் ஏப்., 29 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என, தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான அசாம், கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக ஏப்., 9ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, இந்த மூன்று மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது.
நம் அண்டை மாநிலமான கேரளாவில், 140 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இந்த தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி இந்த முறை ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜ., வென்றதால் சட்டசபை தேர்தலை மிகுந்த உற்சாகத்துடன் அக்கட்சி எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு ஒரு சில நாட்களே எஞ்சி இருக்கும் சூழலில், நாளையுடன் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இங்கு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சபரிமலை தங்கம் மாயமான விவகாரம், மகளிர் நலன் ஆகியவற்றை முன்வைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., காய் நகர்த்தி வருகிறது.
அதே சமயம், ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்யும் நோக்கில் பிரதான எதிர்க்கட்சியான காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்த தேர்தலை சந்தித்து வருகிறது.
புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது. இங்கு மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக புதுச்சேரி முழுதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. ஆளும் என்.ஆர்., காங்., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இந்த தேர்தலை சந்திக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான காங்., – தி.மு.க., கூட்டணி, இந்த முறை அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வியூகம் அமைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. புதிதாக நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க., இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்கி உள்ளதால், பலமுனை போட்டி நிலவுகிறது. புதுச்சேரி மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தம் 126 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. 2016, 2021 என அடுத்தடுத்து இரு முறை பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்புடன் இந்த தேர்தலை சந்தித்துள்ளது.
காங்., கட்சியில் இருந்து தாவி சென்றவர்களால் தான் பா.ஜ., பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் நோக்கில் காங்., களமிறங்கி இருக்கிறது. இதனால், அசாமில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இரு அரசியல் கட்சிகள் சார்பிலும் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் அங்கு தீவிரமடைந்துள்ளது.
வரும் 23ல் தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் அரசியல் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வுடன் வலுவாக மோதி வருகிறார்.
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற தி.மு.க., – காங்., கூட்டணியும், வெற்றி பெற அ.தி.மு.க., – பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் போராடி வருகின்றன.
சீர்திருத்தம் அல்ல! வெளிநாட்டு நன்கொடை முறைமை சட்டத் திருத்தம். பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியின் உண்மையான முகத்தை படம்பிடித்து காட்டுகிறது. இது சீர்திருத்தம் அல்ல; கிறிஸ்துவ அமைப்புகள், தன்னார்வை தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுநல சமூகத்தின் மீதான அடக்குமுறை. இதன் வாயிலாக, பிரதமர் மோடி, கிறிஸ்துவ அமைப்புகளை அச்சுறுத்த பார்க்கிறார். மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்
பழிதீர்க்க வேண்டும்! மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில், இந்த தேர்தலில் வாக்காளர்கள் திரளாக வந்து ஓட்டளிக்க வேண்டும். பெயர் நீக்கப்பட்டதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் இருக்கிறார். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை, திரிணமுல் காங்., பூத் ஏஜன்டுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானால், அதை சரி செய்ய அனுமதிக்காதீர். புதிய இயந்திரத்தை மாற்றிக் கொடுக்க போராடுங்கள். மம்தா பானர்ஜி முதல்வர், மேற்கு வங்கம் திரிணமுல் காங்கிரஸ்
வளமான எதிர்காலம்! கேரள சட்டசபை தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கானது மட்டுமல்ல; மாநிலத்தின் வளமான எதிர்காலத்துக்கானது. முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசு நிதியுடன் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் பெயரை மாற்றி, மாநில அரசு மேற்கொண்டதாக பொய் உரைத்து வருகிறார். யாரையும் தாஜா செய்து அரசியல் செய்யக் கூடாது என்பது தான் பா.ஜ.,வின் நிலைப்பாடு. அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
அன்புதானே எல்லாம் அசாமில் மக்களின் ஒற்றுமைக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தவர் பாடகர் ஸுபீன் கர்க். யாரிடமும் அவர் தவறாக நடந்து கொண்டது இல்லை. காங்கிரசின் கொள்கையும் அது தான். வெறுப்புக்கு எதிராக அன்பை பரப்புவதுதான் எங்கள் நோக்கம். காங்., ஆட்சியை பிடித்ததும் ஊழல் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
மிரட்டலுக்கு பயப்படாதீர்! தேர்தல் நாள் அன்று, மேற்கு வங்க வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு திரளாக வந்து ஓட்டளிக்க வேண்டும். திரிணமுல் காங்., தொண்டர்களின் மிரட்டல்களுக்கு எல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் நிச்சயம் அதன் கடமையை செய்யும். எனவே, வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. நரேந்திர மோடி பிரதமர்
