புதுடில்லி:டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 300 கோடி ரூபாய் மோசடி செய்த, 11 பேரை போலீசார் கைது

புதுடில்லி:டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 300 கோடி ரூபாய் மோசடி செய்த, 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு, சர்வதேச இணைய மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த சுல்தான் என்பவர், சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, போலி வர்த்தக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, 31.45 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதிக லாபத்தை பெற கூடுதல் பணத்தை செலுத்தும்படி அச்செயலியை நிர்வகிக்கும் நபர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர். இதை நம்பி அவர் கூடுதல் முதலீடு செய்தார். எனினும் பணம் கிடைக்கவில்லை. அந்த செயலியின் செயல்பாடும் முடங்கியது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுல்தான், டில்லி போலீசில் புகார் அளித்தார். இதேபோல், 2,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். விசாரணையில், முதலீட்டாளர்களை ஈர்க்க அந்த மோசடி கும்பல் போலி முதலீட்டு தளங்களை உருவாக்கியது தெரிய வந்தது.

முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை, போலி வங்கி கணக்குகள் மற்றும் நிறுவனங்களின் வழியாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து, சட்ட விரோதமாக நிதி பரிவர்த்தனைகளிலும் அக்கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. குறிப்பாக, தென்கிழக்காசிய நாடான கம்போடியாவில் இயங்கும் சர்வதேச இணைய மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கும்பலுடன் இணைந்து செயல்பட்ட கஜாரியா என்பவர் தலைமறைவாக இருந்ததால், அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து டில்லி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கொல்கட்டா விமான நிலையத்தில், கடந்த 3ம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link