புதுடில்லி : சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், 650 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில், வரும், 9ம் தேதியும், தமிழகத்தில், 23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில், வரும், 23 மற்றும், 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி உட்பட சட்டசபை தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
அதன் விபரம்:சட்டசபை தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில், 5,173க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்த, 5,200க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஐந்து மாநிலங்களில், 651 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில், 319 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், போதைப்பொருள், மதுபானங்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, தமிழகத்தில், 170 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ரொக்கம் மட்டும், 30 கோடி ரூபாய்.
அசாமில், 97 கோடி, கேரளாவில், 58 கோடி, புதுச்சேரியில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனைகளில், மக்கள் பாதிக்காதபடி நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
