தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் – சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆனந்த் மோகனை ஆதரித்து நாஞ்சில் சம்பத் ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ரங்கம்பாளையத்தில் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய நாஞ்சில் சம்பத், “அதிமுக, திமுக தவிர்த்து மாற்று அரசியல் வரவேண்டும் என்று மக்களுக்கு எண்ணம் இருக்கிறது. கடந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 40 சதவீதம் அளவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.
மதிமுகவை அறிவாலயத்தில் வைகோ அடக்கம் செய்து விட்டார். தமிழ் மாநில காங்கிஸை ஜி.கே.வாசன் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார், அக்கட்சி கடைத்தேறாது, கல்லறைக்கு போய்விடும். விஜயகாந்தின் மண்டபத்தை இடித்துவர்களுடன் தேமுதிக திமுகவிடம் சரண்டர் ஆகி விட்டது, இதை விட கோவலம் இருக்க முடியாது. தவெக கூட்டணிக்காக நாங்கள் யாரும் முந்தி விரிக்கவில்லை. ஆனாலும் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதையும் ஸ்டாலின் தடுத்துவிட்டார். தற்போது காங்கிரஸ் குடும்ப கட்டுப்பாடு செய்தவரை போல் திருதிருவென முழக்கிறது” என விமர்சித்தார்.
