கடைசி ஓவரில் லக்னோ வெற்றி: ரிஷாப் பன்ட், ஷமி அசத்தல்

ஐதராபாத்: கேப்டன் ரிஷாப் பன்ட் (68*), ஷமி (2 விக்.,) கைகொடுக்க, லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐதராபாத், ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடந்த வருடம் தோறும் நடக்கும் கிரிக்கெட் லீக் போட்டியில் ஐதராபாத், லக்னோ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

விக்கெட் மடமட: ஐதராபாத் அணி துவக்கத்தில் அதிர்ந்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ‘டக்’ அவுட்டானார். தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் டிராவிஸ் ஹெட்டை (7) வெளியேற்றினார். 2வது பந்தை லிவிங்ஸ்டன் தடுத்து ஆட, ஷமியின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. பிரின்ஸ் யாதவ் பந்தில் கேப்டன் இஷான் கிஷான் (1) போல்டாக, 4 ஓவரில் 11/3 ரன் எடுத்து தவித்தது. லிவிங்ஸ்டன் (14) நிலைக்கவில்லை. 10 ஓவரில் 35/4 ரன் எடுத்து தவித்தது.

இருவர் அரைசதம்: பின் கிளாசன், நிதிஷ் குமார் துணிச்சலாக போராடினர். 5வது விக்கெட்டுக்கு 63 பந்தில் 116 ரன் சேர்த்தனர். சித்தார்த் மணிமாறன் பந்தில் நிதிஷ் குமார் (56 ரன், 33 பந்து, 3×4, 5×6) அவுட்டானார். அவேஷ் கான் ஓவரில் கிளாசன் (62 ரன், 41 பந்து, 5×4, 2×6), ஹர்ஷ் துபே (0) வரிசையாக வெளியேற, வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை. ஐதராபாத் அணி 20 ஓவரில் 156/9 ரன் எடுத்தது.

ஷமி மிரட்டல்: லக்னோ சார்பில் ‘வேகத்தில்’ மிரட்டிய 35 வயதான ஷமி, 4 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதில் 18 ‘டாட் பால்’ அடங்கும்.

ரிஷாப் நம்பிக்கை: சுலப இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ் (14), மார்க்ரம் (45) நல்ல துவக்கம் தந்தனர். படோனி (12), பூரன் (1) விரைவில் நடையை கட்ட, 13.1 ஓவரில் 105/4 ரன் எடுத்து தத்தளித்தது. ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ‘காஸ்ட்லி’ கேப்டன் ரிஷாப் பன்ட், நம்பிக்கை தந்தார். அப்துல் சமது (16) ஓரளவு கைகொடுத்தார்.

‘திரில்’ வெற்றி: கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டன. உனத்கட் பந்துவீசினார். முதல் இரு பந்தில் இரு பவுண்டரி அடித்தார் ரிஷாப். 3, 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் இன்னொரு பவுண்டரி அடித்த ரிஷாப், வெற்றியை உறுதி செய்தார். லக்னோ அணி 19.5 ஓவரில் 160/5 ரன் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ரிஷாப் (68 ரன், 50 பந்து, 9×4), முகுல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

Source link