ஆமதாபாத்: ஜெய்ஸ்வால், ஜுரல் அரைசதம் விளாச, ராஜஸ்தான் அணி 6 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதின. தசைப் பிடிப்பு காரணமாக சுப்மன் கில் பங்கேற்காத நிலையில், கேப்டன் பொறுப்பை ரஷித் கான் ஏற்றார். ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜெய்ஸ்வால் அரைசதம்
ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஜோடி, வழக்கம் போல வேகமான துவக்கம் தந்தது. சிராஜ் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் வைபவ். சிராஜ் வீசிய 3வது ஓவரில் ஜெய்ஸ்வால், தன் பங்கிற்கு 6, 4, 4 என விளாசினார்.
அசோக் சர்மா ஓவரின் (5) முதல் இரு பந்தில் வைபவ், 4, 6 என அடித்தார். ராஜஸ்தான் அணி 6 ஓவரில் 69/0 ரன் குவித்தது. போட்டியின் 7வது ஓவரை வீசினார் சுழல் பவுலர் ரஷித் கான். இதன் 2வது பந்தில் வைபவ் (31 ரன், 18 பந்து), பிலிப்சிடம் ‘பிடி’ கொடுத்தார்.
32 பந்தில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் (55) ரபாடா ‘வேகத்தில்’ போல்டானார். ரியான் பராக் (8) வந்த வேகத்தில் வெளியேற, ஹெட்மயர் களமிறங்கினார்.
ஜுரல் நம்பிக்கை
பிரசித் ஓவரில் (14) கடைசி இரு பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார் ஹெட்மயர். இவர் 8 பந்தில் 18 ரன் எடுத்தார். ரபாடா ‘வேகத்தில்’ பெரேரா (1) கிளம்பினார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரல், 30 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து பிரசித் பந்தில் இவர், ஒரு சிக்சர் அடிக்க, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 200 ரன்களை எட்டியது.
ஜுரல் 42 பந்தில் 75 ரன் எடுத்து சிராஜ் பந்தில் வீழ்ந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 210/6 ரன் குவித்தது. ஜடேஜா (7), ஆர்ச்சர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுதர்சன் ஆறுதல்
கடின இலக்கைத் துரத்திய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், குஷாக்ரா (18) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சுதர்சன் அரைசதம் அடித்தார். இவர் 73 ரன் (44 பந்து) எடுத்த போது, பிஷ்னோய் சுழலில் சிக்கினார். தொடர்ந்து அசத்திய பிஷ்னோய், வாஷிங்டனையும் (4) விரைவில் வீழ்த்தினார். பட்லர் 26 ரன் மட்டும் எடுத்தார்.
டிவாட்யா (12), ஷாருக்கான் (11) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் ரஷித் கான், ரபாடா போராடினர். சந்தீப் சர்மா ஓவரில் (18), ரஷித் கான் 4, ரபாடா 6 என விளாசினர். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் 4 ரன் மட்டும் எடுக்கப்பட, கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன.
தேஷ்பாண்டே பந்து வீசினார். முதல் 4 பந்தில், ‘வைடு’ உட்பட 4 ரன் எடுக்கப்பட்டன. 5வது பந்தில் ரஷித்தை (25), அசத்தலாக ‘கேட்ச்’ செய்தார் ஆர்ச்சர். கடைசி பந்தில் ரன் எடுக்கவில்லை. குஜராத் அணி 20 ஒவரில் 204/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
200 விக்கெட்
நேற்று பிலிப்சை வீழ்த்திய ரவி பிஷ்னோய், ‘டி-20’ அரங்கில் 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 170 போட்டியில் 202 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அதிவேக ‘500’
ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், வைபவ் இணைந்து, கிரிக்கெட் லீக் அரங்கில் அதிவேகமாக 500 ரன் எடுத்த ஜோடி என சாதனை படைத்தது. இவர்கள் 248 பந்தில் இந்த மைல்கல்லை எட்டினர். முன்னதாக சேவக்-காம்பிர் ஜோடி (309 பந்து) முதலிடத்தில் இருந்தது.
