சென்னை: ”வேங்கைவயல் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு, தி.மு.க.,வை வீழ்த்தும்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், நீதி கிடைக்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிகளாக தி.மு.க., அரசு சித்தரிப்பதை கண்டித்தும், இந்த சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக, அங்குள்ள பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர்.
வேங்கைவயல் கிராம மக்கள், ஏற்கனவே கடந்த லோக்சபா தேர்தலையும் புறக்கணித்தனர். அதன் பின்னும், அவர்களுக்கு நீதி வழங்க, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பட்டியலின மக்களால் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சியம் காரணமாகவே, இப்படியான அணுகுமுறையை தி.மு.க., அரசு கடைப் பிடிக்கிறது.
தி.மு.க., கூட்டணி கட்சிகளும், பட்டியலின மக்களுக்கு நீதி கேட்டு போராடுவதற்கு பதிலாக, தி.மு.க.,வின் சமூக அநீதிகளுக்கு சப்பைக்கட்டு கட்டி கொண்டிருக்கின்றன.
அதனால் தான் அக்கட்சிகள், இப்போது மக்களின் ஆதரவை இழந்துள்ளன; தி.மு.க.,வின் அடக்குமுறைக்கு ஆளாகி, தங்கள் வேதனையை கூட வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பட்டியலின மக்களின் ஓட்டுகளை மட்டும் வாங்கி கொண்டு, துாக்கி எறியும் துரோக அரசியலை, தி.மு.க., மீண்டும் மீண்டும் செய்து வருகிறது.
இந்த துரோகத்தை, அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வேங்கைவயல் பட்டியலின மக்களின் தேர்தல் புறக்கணிப்பு, தி.மு.க.,வை வீழ்த்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
