நான் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் கடந்தாண்டு மருத்துவ காப்பீடு எடுத்தேன். அவர்களுடைய சேவையில் எனக்கு அதிருப்தி ஏற்பட்டதால், இந்தாண்டு வேறு ஒரு தனியார் நிறுவனத்துக்கு எனது காப்பீடை மாற்றிவிட்டேன்.அதன் பிறகும் முந்தைய நிறுவனத்தில் இருந்து தினமும் பலமுறை போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள். போனை எடுக்காவிட்டால், விடாமல் 8, 10 முறை கூட அழைப்பு விடுக்கிறார்கள். இனி தொந்தரவு செய்யமாட்டோம் என, போனில் பல முறை உறுதி அளித்தார்கள். ஆதாரத்துடன் இ–மெயில் அனுப்பிய பிறகு, ‘இனி எந்த விதத்திலும் அழைக்க மாட்டோம்’ என இ-மெயிலிலும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்கள். ஆனால், எல்லா வாக்குறுதிகளையும் மீறி, மீண்டும் மீண்டும் போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள். இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டுவது?
– ஹரிஹரன், கோவை
அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து, அடிக்கடி அழைக்கும் எண்களை தடை செய்து உங்கள் மன அமைதியை பாதுகாப்பது உங்கள் கையில் உள்ளது.
‘டெலிமார்க்கெட்டிங்’ அழைப்புகளை ஒரு முறை எடுத்தால், அவர்கள் மேலும் பல முறை அழைப்பார்கள். அவர்கள் தங்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விடுவதும் ஒரு நடைமுறை அணுகுமுறை.
இருப்பினும், காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தொடர்ந்து வரும் தொந்தரவு குறித்து நீங்கள் அனுபவிக்கும் சிரமத்துக்கு எனது அனுதாபங்கள். இப்படிப்பட்ட தொந்தரவுகளை பற்றி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு புகார் அளிக்கும் வசதியும் உள்ளது. அதற்கான நடைமுறைகள் அதன் இணையதளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.
புகார் அளித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதற்காக நீங்கள் செலவிட விரும்பும் நேரம் மற்றும் முயற்சி முக்கியமானது. முதலில் எளிய முறைகளை பின்பற்றி பார்த்து, அதனால் பிரச்னை குறைந்தால், மற்ற நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.
எந்த சுகாதார காப்பீட்டு நிறுவனம், கிளைம் விஷயத்தில் நன்றாக செயல்படுகிறது? அதை அறிந்துகொள்வது எப்படி?
– சங்கரன், திருவல்லிக்கேனி
ஒரு குறிப்பிட்ட சுகாதார காப்பீட்டு நிறுவனம் எப்போதும் முன்னணியில் இருக்கும் என்று கூற முடியாது, ஏனெனில் நிறுவனங்களின் செயல்திறன் காலத்தின்படி மாறிக்கொண்டே இருக்கும். இதற்கான நம்பகமான மற்றும் அப்டேடட் தகவல்களை பெறுவதற்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மிக சிறந்த ஆதாரமாகும்.
அங்கு வெளியிடப்படும் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ போன்ற புள்ளிவிபரங்கள், ஒரு நிறுவனம் எவ்வளவு திறம்பட கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது என்பதை அறிய உதவும். சுகாதார காப்பீடு, பல்வேறு வகையான நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் இதை வழங்குகின்றன.
மேலும், சுகாதார காப்பீட்டு திட்டங்களில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு. ஒன்று, மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் இழப்பீட்டு காப்பீடு; மற்றொன்று, ஒரு குறிப்பிட்ட நோய் கண்டறியப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்கும் பயனளிக்கும் திட்டங்கள். இந்த இரண்டு வகை பாலிசிகளுக்கும் புள்ளி விபரங்களை பாருங்கள்.
எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது என்பது அந்த நிறுவனத்தின் சேவை தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் பொறுத்தது. இதை அந்தந்த கம்பெனிகளிடமிருந்து பாலிசிகளை பெற்று அனுபவம் உள்ளவர்களை கேட்டு அறிந்துகொள்வது பயனளிக்கும்.
மத்திய அரசு ஊழியரான நான் இன்னும் நான்கு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளேன். தற்போது வங்கியில் வீட்டுக்கடன் உள்ளது. இந்நிலையில், டேர்ம் பாலிசி அல்லது வேறு ஏதாவது ஒரு பாலிசியை எடுக்க விரும்புகிறேன். காப்பீட்டு காலத்தில் எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், முழு காப்பீட்டு தொகை என் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும். வங்கி கடனுக்கு போகக்கூடாது. அதன்படி, ஒரு நல்ல காப்பீடு பாலிசியை பரிந்துரைத்து தாருங்கள்.
– சி.வி.விஜய்.
சென்னை
வீட்டு கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், குடும்பத்தை பாதுகாக்க காப்பீடு எடுக்க நினைப்பது மிகவும் நல்ல மற்றும் பொறுப்பான முடிவாகும். பொதுவாக, வங்கிகள் பரிந்துரைக்கும் கடன் காப்பீட்டு பாலிசி நிலுவையில் உள்ள கடன் தொகையை மட்டுமே பாதுகாக்கும் வகையில் இருக்கும். இத்தகைய பாலிசியில், மறைவின் போது காப்பீட்டு தொகை வங்கிக்கே செலுத்தப்படும்.
ஆனால், நீங்கள் விரும்புவது போல முழு காப்பீட்டு தொகையும் உங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும் என்றால், தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ளும் டேர்ம் ஆயுள் காப்பீடு பாலிசி தான் சரியான தேர்வாகும். இப்படிப்பட்ட பாலிசியில், காப்பீட்டு தொகை முழுவதும் உங்கள் நாமினிக்கு வழங்கப்படும்.
அதன் வாயிலாக, குடும்பம் நிலுவையில் உள்ள கடனை அடைத்து, மீதியை தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்தகைய பாலிசியை எடுத்துக்கொள்ளும்போது, குறைந்தது கடன் கால அளவுக்கு சமமான காலத்துக்கு கவர் எடுத்துக்கொள்ளவும். கடன் தொகைக்கு சமமான அல்லது அதைவிட அதிகமான காப்பீட்டு தொகையை நிர்ணயிக்கவும் வேண்டும்.
ஆனால், இந்த ஆப்ஷனில் ஒரு முக்கியமான பொறுப்பு உங்களுக்கே இருக்கும். அதாவது, பிரீமியத்தை காலம் தவறாமல் செலுத்த வேண்டும். ஒரு தவணை தவறிவிட்டால்கூட டேர்ம் பாலிசி செயலிழக்கும். இந்த பாலிசிக்கு ரிவைவல் கிடையாது, என்பதால், இதை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும்.
