வாஷிங்டன்: ஈரான் போரினால் எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு உள்ளிட்டவை அமெரிக்காவிலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன. ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் வினியோகம் பாதிப்பால், அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு தாக்கம் அமெரிக்காவையும் தாக்கியுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் தாக்கம், விவசாயம், கட்டுமானம் மற்றும் போக்குவரத்து மட்டுமின்றி மற்ற தொழில்களுக்கும் பரவியுள்ளது. ‘இ – காமர்ஸ்’ நிறுவனமான ‘அமேசான்’, வரும் 17ம் தேதி முதல், விலைப்பட்டியலில் எரிபொருள் கூடுதல் கட்டணமாக 3.50 சதவீதத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அஞ்சல் துறையும் அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகளை கையாள்வதற்காக பார்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் மெயில் டெலிவரிகளுக்கு தற்காலிகமாக 8 சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதிக்க அனுமதி கோரியுள்ளது. இது அனுமதிக்கப்பட்டால், இந்த விலை உயர்வு, வரும் 26ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன., 17ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது-.
போக்குவரத்து செலவுகள் உயர துவங்கினால் அது மற்ற பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
