கி ருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியின் த.வெ.க., வேட்பாளர் என, மஞ்சுநாத் என்பவரை கட்சித் தலைவரான நடிகர் விஜய் அறிவித்தார். ஆனால், அவர் போட்டியிடாமல் விலகியதால், மஞ்சுநாத்துக்கு பதிலாக அம்பரீஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசி நேரத்தில், த.வெ.க.,வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வேந்தர்க்கரசன் என்ற வடிவேல், நேற்று முன்தினம் த.வெ.க., வேட்பாளராக, வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வடிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில், த.வெ.க.,வில் அண்மையில் இணைந்த, சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மது ஹேம்நாத் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது அழுத்தம் காரணமாகவே, த.வெ.க., தலைமை கடைசி நேரத்தில் வடிவேலை வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதனிடையே, வடிவேல் தான் த.வெ.க.,வின் ஓசூர் தொகுதி வேட்பாளர் என, சில நாட்களுக்கு முன்பே, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அப்போது, ‘இந்த தகவல் உண்மையில்லை; கட்சி தலைமை அம்பரீஷை தான் வேட்பாளராக அறிவித்துள்ளது. எந்த புரளியையும் கிளப்ப வேண்டாம்’ என பதிவிட்டு, த.வெ.க.,வினர் சமாளித்தனர்.
ஆனால், அம்பரீஷ் வேட்புமனு தாக்கல் செய்யாமல், கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வடிவேல், வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த மாற்றங்களும் குழப்பங்களும், கிருஷ்ணகிரி த.வெ.க.,வில் ஒரு தரப்பினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கட்சித் தலைமை வேட்பாளரை அறிவித்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே இப்படி குழப்பம் ஏற்பட்டிருப்பது, த.வெ.க., நிர்வாகிகளுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
