ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடி அருகே, உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட, 9.47 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் செக்போஸ்டில், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை மாவட்டம், ஹார்விபட்டியைச் சேர்ந்த ராஜா, 36, என்பவரின் காரை பரிசோதித்தனர்.
நகைக் கடைகளுக்கு மொத்தமாக நகைகள் விற்பனை செய்யும் முகவரான அவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த, 9 கோடியே 47 லட்சத்து 22,868 ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் கொண்ட எட்டு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். பின், அந்த நகைகள், முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
