புதுக்கோட்டை: ”தமிழகத்தை எப்படியாவது கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை பா.ஜ., பயன்படுத்தி வருகிறது,” என, துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் முத்துராஜாவை ஆதரித்து, புதுக்கோட்டை திலகர் திடலில் உதயநிதி நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., அரசு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியதால் தான், ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், மத்திய பா.ஜ., அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில்லை. அப்படி தமிழகத்தை ஒதுக்குகிற பா.ஜ.,வை, தமிழகத்தில் நுழைய விடலாமா?
அ.தி.மு.க., என்ற முகமூடியை அணிந்து, போர்வையை போர்த்திக் கொண்டு தமிழகத்தில் நுழைந்து விட பா.ஜ., துடிக்கிறது. எனவே தான், இந்த தேர்தல் டில்லிக்கும், தமிழகத்துக்கும் நடக்கும் போர் என்று நாங்கள் சொல்கிறோம்.
மோடியின் முரட்டு அடிமையான அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இரண்டு விரல்களை காட்டிக் கொண்டே ஓட்டு கேட்கிறார். அவருக்கு ஏற்கனவே 10 தோல்விகளை பரிசளித்து விட்டோம். 11வது முறையாகவும் தோற்கடித்து விடுங்கள் என்ற பொருளில் தான் இரண்டு விரல்களை காட்டுகிறார் பழனிசாமி.
தமிழகத்தை எப்படியாவது கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வரும் பா.ஜ., பழனிசாமியை பயன்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகம் என்றைக்குமே டில்லிக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ என்று நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
