துாத்துக்குடி: தே.ஜ., கூட்டணியில் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், திருச்செந்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நேற்று அ.தி.மு.க., மாவட்டச் செயலரும் வேட்பாளருமான சண்முகநாதனை சந்தித்தார்.
ஏரல் அருகே பண்டாரவிளை கிராமத்தில் உள்ள சண்முகநாதன் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில், அவருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளால் கட்டப்பட்ட பண மாலையை ராதாகிருஷ்ணன் அணிவித்துள்ளார்; முருகன் சிலை ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என்ற விதியை மீறி, பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகநாதனுக்கு பண மாலை அணிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க., நிர்வாகி செல்வகுமார், தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்து, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
