அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களால் மூழ்கும் ம.ம.க., வேட்பாளர்

தி.மு.க., கூட்டணியில், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமதுக்கு, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களால், வெற்றிக்கனி எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியானது, அமைச்சர் மகேஷ் மாவட்ட செயலராக இருக்கும், தி.மு.க., தெற்கு மாவட்ட எல்லைக்குள் உள்ளது. இங்கு, திருச்சியை சேர்ந்த மற்றொரு அமைச்சரான நேருவுக்கு தனியாக ஆதரவாளர்கள் உண்டு. இவர்கள், உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகளுடன் ஒட்டாமல், தனியாகவே இருப்பது வழக்கம்.

இந்நிலையில், ம.ம.க., வேட்பாளர் அப்துல் சமதுவை அறிமுகம் செய்வதற்கான தி.மு.க., கூட்டணி கட்சியினர் கூட்டத்தில், இவர்களுக்கு அழைப்பு இல்லை. கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் நேருவை, ஆண்டவர் கோவில் அருகே, அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து, தங்களை அழைக்கவில்லை என புகார் பட்டியல் வாசித்தனர்.

உடனே நேரு, ‘உங்களை கூப்பிடாவிட்டால் நீங்கள் வரவேண்டாம்; நான் மட்டும் போய்ட்டு வரேன்’ என சொல்லி சென்றார். கூட்டம் முடிந்தபின், அதே இடத்தில், நேருவை அவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதையறிந்த மணப்பாறை தி.மு.க.,வினரோ, ‘அவர்களையும் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டிய அமைச்சர் நேருவே, வர வேண்டாம் என சொல்லியதில் என்ன நியாயம் என தெரியவில்லை. இதில், தி.மு.க., முதன்மை செயலராக வேறு உள்ளார்’ என குமுறுகின்றனர்.

இதை பார்த்தால், ம.ம.க., வேட்பாளருக்கு நேரு ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பரா, ம.ம.க., வேட்பாளர் கரை சேர்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source link