நா.த.க., பொதுக்கூட்டம், தேர்தல் செலவினம் உள்ளிட்டவற்றிற்கு, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன், திரள்நிதி வசூலிப்பதாக சமீபத்தில் சீமான் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இவற்றை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தாலும், நா.த.க.,வினர் அவற்றை கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும், திரள்நிதி வசூலிப்பதை அக்கட்சியினர் பிரதானமாக்கி உள்ளனர்.
இந்நிலையில், நா.த.க.,வின், 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார். ‘தமிழக மக்கள் நலனுக்காக வீதியிலும், வெயிலிலும் நின்று கத்திக் கொண்டிருக்கிறேன்’ என, ஆவேசமாக பேசி வரும் சீமானுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், சிறார்கள் தாங்கள் சேமித்த உண்டியல் பணத்தை, அவரிடம் திரள்நிதிக்கு கொடுத்து வருகின்றனர். கோவையில் நடந்த பிரச்சாரத்தில், சிறார்கள் கொடுத்த உண்டியலை பெற்ற சீமான், மகிழ்ச்சியுடன் அவர்களின் கைகளில் முத்தமிட்டார். அதேபோல், பல இடங்களிலும், பொதுமக்கள் தாங்களாகவே, திரள்நிதியை நா.த.க.,விற்கு அளித்து வருவது, நிதி குறித்த கவலையில் இருந்த சீமானை ரொம்பவே மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
‘கட்சிக்கு நிதி இல்லாதது வருத்தம் தான். ஆனால், நம் கட்சியை ஏற்று சிறார்களே, நிதி அளிக்க முன்வந்திருப்பது, கட்சியின் செயல்பாடு சிறுவர்கள் வரை சென்றுள்ளதை காட்டுகிறது. அடுத்த தலைமுறையை காக்கும் என் எண்ணம் பிடித்துப் போனதாலேயே, சிறார்கள் தாங்கள் சேமித்த உண்டியல் பணத்தை நா.த.க.,விற்கு வழங்கி வருகின்றனர்’ என நெகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார் சீமான்.
