தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.
தென் மாவட்டங்களில் நாளை முதல் சசிகலா பிரச்சாரம்
கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று முதல் 10-ம் தேதி வரை, இக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி நாளை, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தொகுதிகளிலும், 8-ம் தேதி போடி, நிலக்கோட்டை, திண்டுக்கல், மேலூர், தொகுதிகளிலும், 9-ம் தேதி சிவகங்கை, மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் தொகுதிகளிலும், 10-ம் தேதி சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
Apr 06, 2026 07:24 IST
விஜயின் சென்னை பரப்புரை ரத்து
இன்று (ஏப்ரல் 06) சென்னையின் அண்ணா நகர், வில்லிவாக்கம், தி நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டு த.வெ.க. சார்பில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டு இருந்தது.
எனினும், வில்லிவாக்கம் சிட்கோ நகர் சந்திப்பு, தி நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் தேர்தல் பரப்புரை செய்ய த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
நான்கு இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளுடன் வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதன் காரணமாக, விஜய் தரப்பு பிரசாரத்தை முழுமையாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 06, 2026 07:24 IST
ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சோதனை
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவில் சோதனை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அந்த கல்வி நிறுவனத்தில் (இந்திரா கணேசன் கல்லூரி) கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
