பல்லடம்: நுால் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், இன்று முதல் 50 சதவீத உற்பத்தியை குறைப்பது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:
பஞ்சு விலை கிலோவுக்கு 7,000 ரூபாய் வரை உயர்ந்ததோடு, பாலியஸ்டர் மற்றும் ரேயான் விலையும் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்திய பருத்தி கழகமான சி.சி.ஐ., தனியாரிடம் பஞ்சை வழங்கியது. சர்வதேச போர் சூழல் காரணமாக நுால் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதற்கு இணையாக துணி விலையை உயர்த்த முடியாமல் ஜவுளித் துறை முடங்கியுள்ளது.
ஏற்றுமதி குறைந்து உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்து உள்ளதால், தொழிலை தொடர முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இன்று முதல் உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கி, உள்நாட்டு தேவைக்கு போக, மீதமுள்ள நுாலை மட்டுமே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
