சென்னை: உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, வடசென்னை தொகுதிகள் பக்கம் செல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்

சென்னை: உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, வடசென்னை தொகுதிகள் பக்கம் செல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். அமைச்சர் சேகர்பாபுவிற்கும், கட்சி தலைமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

வடசென்னை எல்லைக்கு உட்பட்ட கொளத்துார் தொகுதியில், முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகின்றனர். துறைமுகம் தொகுதியில், அமைச்சர் சேகர்பாபு போட்டியிடுகிறார். ராயபுரம் தொகுதியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும், வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க.,வை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவும் போட்டியிடுகின்றனர். திரு.வி.க., நகர் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்து, வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி போட்டியிடுகிறார். இதனால், வடசென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

படுகொலைகள்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தி.மு.க., அரசு செய்துள்ள பல்வேறு திட்டங்கள், அந்த கட்சியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என, முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபுவும் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்னையை அ.தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், வடசென்னையில் முறையாக சட்டம் – ஒழுங்கு பராமரிக்கப்படாததால், அரசியல் படுகொலைகள், முன்விரோத படுகொலைகள் அதிகளவில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக, உளவுத்துறை பல்வேறு எச்சரிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளது. இது தொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை மையப்படுத்தி, வடசென்னையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, த.வெ.க., – நாம் தமிழர் கட்சியினரும், இந்த பிரச்னையை மையப்படுத்தி பேசி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை மற்றும் அதன்பின் நடந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன.

பிரபல யு – டியூபர் உள்ளிட்ட சிலர் தெரிவித்துள்ள கருத்துக்களும், தி.மு.க.,விற்கும், அக்கட்சி வேட்பாளர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தி, சில தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தன் மனைவி வீடு அமைந்துள்ள தொகுதி, முதல்வர் ஸ்டாலின் தொகுதி உட்பட, வடசென்னையின் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய, செல்வபெருந்தகை திட்டமிட்டு இருந்தார்.

அறிவுரை

உளவுத்துறை எச்சரிக்கை அடிப்படையில், வடசென்னை பக்கமே வரவேண்டாம் என, அவருக்கு, செல்வப்பெருந்தகைக்கு தி.மு.க., தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்களால், அமைச்சர் சேகர்பாபுவிற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, உளவுத்துறை வாயிலாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

எனவே, தகுந்த பாதுகாப்புடன், வடசென்னையில் உள்ள தொகுதிகளில், அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என, வழங்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சருக்கே தெரியாமல், அவரை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி போட்டியிடும் திரு.வி.க., நகர் தொகுதிக்கு செல்வதை, முடிந்தவரை தவிர்க்க வேண்டும் எனவும், சேகர்பாபுவிற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Source link