அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி (15.03.2026) அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, 5 ஆயிரத்து 173க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக வரப்படும் புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இது தவிர, வெவ்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள 5 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 5 வரை மொத்தம் ரூ. 651.51 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் ரூ. 319 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 170 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த மதிப்பில் ரூ. 53.2 கோடி ரொக்கம், ரூ. 79.3 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 230 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ. 58 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் ரூ. 231.01 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் அல்லது அலைக்கழிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான புகார்களை உடனுக்குடன் தீர்ப்பதற்கு மாவட்ட அளவில் தனித்தனியே குறைதீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசியல் கட்சிகள் அல்லது பொதுமக்கள் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், அது குறித்து ECINET-ல் உள்ள ‘சி-விஜில்’ (C-Vigil) எனும் அலைபேசி செயலி வாயிலாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
