“குற்ற உணர்ச்சியாக இருக்கிறது” – பாலா வெளிப்படை!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே இசையமைத்திருக்கும் இப்படம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாகக் கொண்டு சர்வைவல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. 

இப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்கள் வெற்றிமாறன், ராஜூ முருகன், வசந்த பாலன், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டியிருந்தனர். நடிகர் சூர்யா படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் பாலா இப்பட இயக்குநருடன் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “நந்தா படம் முழுக்க முழுக்க அவர்களின் வலியை சொல்லும் படம் மட்டும் இல்லை. அதில் சில ஜனரஞ்சகமான விஷயங்களும் இருக்கும். நீங்கள் எடுத்திருப்பது மிகவும் பொறுப்பான படம். அப்படிப் பார்க்கையில் இது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய இந்த சினிமா புனிதமானதாக தோன்றுகிறது. அது உண்மையிலே பாராட்டுதலுக்குறியது. 

பாலுமகேந்திரா சாருக்கு நான் மூத்த சிஷியனாக இருப்பேன். நீங்கள் கடைசி சிஷ்யனாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவருக்கு இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாகவே இருந்தது. ஆனால் அது முடியாமல் போனது. அப்படி யாராவது எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது. அதை ஒரு சிஷ்யனாக நீங்கள் நிவர்த்தி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. புலம்பெயர்ந்து போவது என்பது சாதாரண வலி அல்ல. பிறந்த, விளையாண்ட இடத்தை, காதலை விட்டுவிட்டு நாடுகடந்து செல்வது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஆனால் இப்போது உங்கள் படம் பார்த்தற்கு பிறகு அனுபவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்கள் படத்தை பார்த்தாவது அந்த வேதனைகளை புரிந்து கொள்ள முடியுமென்கிற உணர்வை உணர்த்தியது” என்றார். 

Source link