விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகே உள்ள எருக்கன்கட்டுப்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இன்று (06.04.2026 – திங்கள்கிழமை) அதிகாலையில் சுமார் 20 அடிக்கு பாலம் திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால் பாலத்தின் பக்கவாட்டில் இருந்த நிலத்தின் மண் மேடாக மாறியது இதனால் சர்வீஸ் சாலையையும் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த பகுதியில் பல்வேறு தற்காலிக பணிகள் மேற்கொண்டு வந்ததால் நள்ளிரவில் 20 அடிக்கு மேல் ஏற்பட்ட பள்ளத்தை பார்த்த தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களை வீட்டில் இருந்து காலி செய்யும்படி கூறியுள்ளனர். தற்போது தொடர்ந்து பாலம் உள்வாங்கி வருவதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக வயல்வெளி இருந்தது.
அந்த பகுதியில் சரியான முறையில் கான்கிரீட் அமைக்காமல் அவசரக் கதியில் மேம்பாலம் கட்டியதால் தொடர்ந்து அந்த பகுதியில் பாலம் அவ்வப்போது சேதமாகி வருவதை ஊழியர்கள் சரி செய்து வருவதாகவும். எவ்வாறு பணிகள் மேற்கொண்டாலும் மீண்டும் மீண்டும் பாலம் சேதம் ஏற்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பணிகள் நடைபெற்று இருக்கும்போது பாலம் திங்கள்கிழமை அதிகாலை திடீரென உள்வாங்கியுள்ளது. இதனைப் பார்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். பின்னர் எங்களை பாதுகாப்பான இடத்திற்கு வீட்டை காலி செய்து செல்லும் படி கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து நாங்கள் குழந்தைகள், கால்நடைகளை அருகாமைக்கு அழைத்து சென்றோம். இங்கு நிம்மதியான முறையில் வாழ முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். மேலும் கட்டுமான பணிகளை தரமற்ற முறையில் செய்ததாலும் அவசரக் கதியில் பணிகளை மேற்கொண்டதாலும் தொடர்ந்து இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலத்தை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், வயல்வெளி பகுதியில் கான்கிரீட் அமைத்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நாங்கள் பணிகளை நடக்க விடுவோம் எனவும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றால் மாற்று இடம் கொடுத்து வீடு கட்டி தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
