தேமுதிகவுக்கு அரைசதம் ஓட்டு வங்கிதான்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் இபிஎஸ்

சேலம்: ‘தேமுதிகவுக்கு அரைசதம் ஓட்டு வங்கி தான் உள்ளது என்பது உண்மை. கூட்டணி மாறியதால், ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை,’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக போட்டியிடுவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கேள்வி : பல்வேறு தொகுதிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறீர்கள்… மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது…?

பதில் : பிரகாசமாக இருக்கிறது. வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

கேள்வி: நேற்று பிரசாரத்தில் நீங்கள் தேமுதிகவை அரை சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறி இருக்கிறீர்களே…?

பதில்: இருக்கின்ற நிலை அது தானே. ஊடகத்தில் வந்த செய்திகளைத் தான் நான் தெரிவித்தேன்.

கேள்வி : எம்பி சீட்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டீர்கள் என்று பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார், அதிக அளவு குற்றச்சாட்டு உங்கள் மீது வைத்துள்ளார்களே….?

பதில்: இல்லையே. நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேனே.. எல்லா ஊடகத்திலும் வந்து இருக்கிறதே. 2026ல் கொடுப்போம் என்று சொன்னேன். அவர்களின் மனநிலை வேறு ஒன்றாக இருந்தது. கூட்டணி மாறி விட்டார்கள்.

கேள்வி : திமுக கூட்டணியில் பல்வேறு இடங்களில் விசிகவின் பானை சின்னம் வரைய மறுக்கிறார்கள். அவர் பெயரைக் கூட எழுத மாட்டோம் என்று சொல்லும் நிலையில் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்…?

பதில் : விசிக தலைவரிடம் இது பற்றி கேளுங்கள். ஏனென்றால் திமுகவை தாங்கிப் பிடித்தவர் திருமாவளவன் தான். அவரிடம்தான் இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். அவருக்கு கிடைத்த பரிசு இது.

கேள்வி : தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கொண்டு வருவோம் என்று இப்போது மோடியும், அமித்ஷாவும் சொல்வார்களா என முதல்வர் ஸ்டாலின் சவால் விட்டுள்ளாரே…?

பதில் : ஏன் உதயநிதி பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டு இருக்கிறாரே. சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்கள். அவர்கள் நடத்தினால் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள், ஆனால், கேள்வி மட்டும் என்னிடத்தில் கேட்கிறீர்கள்… அவரிடம் கேளுங்கள். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிபிஎஸ்இ பள்ளி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி : உங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள கல்லூரி உள்ளிட்ட நிறைய திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெற்றி பெற்று வந்த பின் அந்த திட்டங்களை செயல்படுத்துவீர்களா…?

பதில் : அதிமுக ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் கொண்டு வந்தோமோ, அந்த திட்டங்கள் முழுவதும் தொடரும். எடப்பாடி தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளிலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக அரசு நிறுத்தி இருந்தால், அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களின் நன்மை கருதி தொடரும்.

கேள்வி; இது டில்லிக்கும், தமிழகத்திற்கும் நடக்கிற தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறாரே? அதுபற்றி…

பதில் : அவருக்கு வேறு வழியில்லை, ஒன்றும் தெரியவில்லை. இது சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இல்லை. அதை முதலில் முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். புரியாமல் பேசினால் நாங்கள் என்ன செய்வது. இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேளுங்கள்…

கேள்வி : இப்போது தேர்தல் களம் எப்படி இருக்கிறது..?

பதில் : மக்கள் தான் நீதிபதிகள், மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி சட்டமன்ற தொகுதி முன்மாதிரியான தொகுதியாக இருக்கும் அளவிற்கு, மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்தார்களோ, அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறேன்.

ஒன்றிரண்டு விட்டுப் போயிருந்தால், அடுத்து வரும் வாய்ப்பை வைத்து செயல்படுத்துவேன். நூறு ஏரி திட்டம். வேண்டும் என்று திட்டமிட்டு நான் எந்த இடத்தில் அடிக்கல் நாட்டினேனோ, அந்த இடத்தில் இன்னும் தண்ணீர் வரவில்லை. எவ்வளவு வேதனை. மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் உபரியாக வெளியே திறக்கப்படுகிறது. அப்போது நீரை வறண்ட ஏரிகளில் நிரப்ப முடியும். ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு, திட்டமிட்டு எடப்பாடி தொகுதி போன்றே, மற்ற பகுதிகளிலும், திட்டமிட்டு நீர் நிரப்பவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி வரும். நான் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகு. இந்த திட்டம் எல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

கேள்வி : நீங்கள் அமித்ஷா எல்லோரும் சேர்ந்து பிரசாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா..?

பதில் : 15ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.

கேள்வி : திமுக ஆட்சியில் நிறைய ஊழல் நடந்ததாக ஆளுநரிடம் புகார் மனு அளித்தீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பீர்கள்…?

பதில் : ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலை விட, அமலாக்கத்துறை ஆதாரத்தோடு, டிஜிபியிடம் அறிக்கை அளித்திருக்கிறது. அந்த அறிக்கையின் படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட அமைச்சர் மீது மூன்று முறை அமலாக்கத்துறையினர் சட்டம் ஒழுங்கு டிபிஜிக்கு அறிக்கை அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அதிமுக சார்பில் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றமும் அமலாக்கத்துறை ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அரசு டிபிஜி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும் கூட இன்னும் கால தாமதமாகிறது. அதிமுக அரசு இதை சட்டரீதியாக எடுத்துச்செல்லும்.

கேள்வி : தொடர்ந்து விஜய், எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று சொல்லி வருகிறார்…? அதுபற்றி

பதில் : நீங்கள்தான் அந்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள். அவருக்கு அவ்வளவுதான் தெரியும் என்பதால் அப்படி ஒரு கருத்தை சொல்கிறார். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.? அந்தக் கட்சி தலைவரைத் தான் நீங்கள் கேட்க வேண்டும். அதிமுக பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த கட்சி. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சி. மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்ற கட்சி. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பிய கூட்டணியை நாங்கள் அமைத்துள்ளோம். எங்கள் கட்சியை விஜய் விமர்சிக்கவில்லை என்றால் அது அறியாமையின் வெளிப்பாடு.

கேள்வி : அதிமுக ஆட்சி அமைந்தால் கலைஞரின் இறுதி நாட்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று பேசி வருகிறீர்கள். அதன் உள் நோக்கம் என்ன…?

பதில் : ஆ.ராசா ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் பரவலாகப் பேசப்படுகிறது. அதை பற்றித் தான் கிருஷ்ணகிரியில் நான் பேசினேன். கருணாநிதி உடல் நிலை சரியில்லாத போது, வீட்டுச்சிறையில் வைத்ததாக ஒருவர் சொல்கிறார். அதோடு பட்டியல் இன மக்களை பாகுபாடு பார்ப்பதாகச் சொன்னார். கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது அந்த ஆடியோவில் இருக்கிறது. ராசா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, என் மீது பாய்வதில் என்ன நியாயம் இருக்கிறது.? ராசா பேசியதாக ஆடியோவில் வந்த செய்தியைத் தான் நான் பேசினேன், இவ்வாறு அவர் கூறினார்.

Source link