ஒரு சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும், அதேபோல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
அப்படி ஒரு நபர் எம்.பி-யாக இருந்துகொண்டே எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட முடியுமா? அதேபோல ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளிலும் நீடிக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது….
எம்.பி – எம்.எல்.ஏ
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை ஏதுமில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்ற பிறகு இரண்டு பதவிகளிலும் ஒரே நேரத்தில் நீடிக்க முடியாது என்று தான் சட்டம் சொல்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, ஒருவர் எம்.பி-யாக இருக்கும்போதே எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது ஒரு பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தானாகவே இழந்துவிடுவார்.
இந்திய அரசியலமைப்பின் 101(2) வது பிரிவின்படி, ஒருவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருக்க முடியாது.
