புதுடில்லி:தன் கடை முன் வாகனத்தை நிறுத்திய பெண் போலீஸ் அதிகாரியை தடுத்த கடை உரிமையாளர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் அதிகாரி மற்றும் அவரின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வட மேற்கு டில்லியில் உள்ளது ரோஹினி. இந்த பகுதியில் உள்ள செக்டார் 7 என்ற இடத்தில் டாக்டர் ஒருவரை பார்ப்பதற்காக, கர்ப்பமாக இருக்கும் பெண் போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், நேற்று முன்தினம் மாலையில் வந்தார்.
அந்த பெண் டாக்டரின் கிளினிக் இருக்கும் இடம் மிகவும் குறுகலாகவும், வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமலும் இருந்ததால், அந்த போலீஸ் அதிகாரி, தன் வாகனத்தை பக்கத்தில் இருந்த கடை முன் நிறுத்தினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கடை உரிமையாளரான, 78 வயது நபர், வாகனத்தை உடனடியாக எடுக்குமாறு கூறினார். டாக்டரை முதல் ஆளாக பார்த்து சென்ற பின், வாகனத்தை எடுத்து விடுவதாக அந்த பெண் எஸ்.ஐ., கூறினார்.
அதை கேட்காமல், அந்த முதியவர் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஆதரவாக பலர் திரண்டனர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் அந்த முதியவரை, பெண் போலீஸ் எஸ்.ஐ., தாக்கினார்.
இதை அறிந்த அந்த கும்பல் மேலும் தகராறில் ஈடுபட்டு, அந்த பெண் எஸ்.ஐ.,யை கைது செய்ய வேண்டும் என கோரி, தகராறில் ஈடுபட்டது. அதையடுத்து, அந்த பெண் மீதும், அவரின் கணவர் மீதும் போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
