சென்னை: பெரம்பூர் தொகுதியில் புதிய பிரமாண பத்திரத்தை தவெக தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: பெரம்பூர் தொகுதியில் புதிய பிரமாண பத்திரத்தை தவெக தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்துள்ளார். மொத்தமாக 3வது முறையாக அவரது வேட்பு மனுவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவரான நடிகர் விஜய் தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுக்களையும் அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டார். அவர் தாக்கல் செய்த இரு வேட்பு மனுக்களிலும் வெவ்வேறு தகவல்கள் இடம்பெற்று இருந்தது.

பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தம் மீது எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதே சமயத்தில் திருச்சி கிழக்கில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி இருந்தார். மேலும் இரு தொகுதிகளிலும் விஜய் வயதும் முரணாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, தவெக வக்கீல்கள் தரப்பில் பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய கடந்த 30ம் தேதி உரிய மனுக்கள் அளிக்கப்பட்டன. பின்னர், சில தகவல்கள் விடுபடவே மீண்டும் திருத்தம் செய்யப்பட்ட மனுவை ஏப்.4ம் தேதி பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் வழங்கினார். விஜய் மீதான வழக்கு விவரங்கள் இணைக்கப்பட்டு இருந்தன.

அதாவது மதுரை மாநாட்டில் ரசிகர்களை தூக்கி வீசியதாக தொடரப்பட்ட வழக்கு விவரங்கள், கொளத்தூரில் பிரசாரத்தின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கின் விவரங்கள் அதில் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த பிரமாண பத்திரத்தில் விஜயின் பிரசார வாகனம் (இதன் மதிப்பு ரூ.6 கோடி), வயது குறித்த தகவல்களும் இணைக்கப்பட்டு உள்ளன.

இந் நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்ற நிலையில், கடந்த முறை விடுபட்டு இருந்த தகவல்கள் அனைத்தும் உள்ளடக்கிய புதிய பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்துள்ளார். இதை விஜய் நேரில் சென்று தாக்கல் செய்யவில்லை. மாறாக, பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் வழங்கி இருக்கிறார்.

Source link