கோவை: கோவையில் திமுகவை அனைத்து தொகுதிகளிலும் திமுகவினரே தோற்கடிப்பார்கள் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நம்பிக்கை
கோவையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: இன்று முதல்தேர்தல் முடியும் வரை பாஜ சார்பில் தினமும் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி நிறைய பேசுகின்றனர். சரியான தரவுகள் இல்லாமல் மக்கள் மன்றத்தில் பேசுகின்றனர்.
தினமும் மக்கள் மன்றத்தில் உண்மை சொல்ல வேண்டும். மக்கள் யோசித்து ஓட்டுப் போட வேண்டும் என்ற முயற்சி. அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி 210க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எப்ஆர்சிஏ சட்டம்
3, 4 நாட்களில் கோவையில் பல இடங்களில் ஸ்டாலின் பேசினார் . பல கேள்விகளை வைத்து இருந்தார். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முதல்வர் தொடர்ந்து எப்சிஆர்ஏ மசோதா குறித்து பேசுகிறார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. எப்சிஆர்ஏ என்பது கொண்டு வரப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான். வெளியில் இருந்து கொடுக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்கள் முறையாக வாங்க வேண்டும் என்பதற்காக.
வெளியில் இருந்து பணத்தை கொடுத்து உள்நாட்டில் கலகத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக 1976 ல் முன்னாள் பிரதமர் இந்திரா, எப்சிஆர்ஏ சட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் பிறகு காங்கிரஸ் திமுக ஆட்சியில் இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தனர். 2016, 2018, 2020ம் ஆண்டுகளில் பாஜ அரசு சிறுசிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது . இருப்பினும், 2026 ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இது யாருக்கும் எதிரானது கிடையாது.
ஆனால், இது சிறுபான்மையிருக்கு எதிரானது, கிறிஸ்தவருக்கு எதிரானது என முதல்வர் ஸ்டாலின் பொய்ப் பிரசாரத்தை பேசுகிறார். எப்சிஆர்ஏ ஐ அனைவரும் வைத்துள்ளனர். அனைத்து அமைப்புகளும் வைத்து இருக்கின்றன. வெளியில் இருந்து நிதி வந்து உள்ளே வேலை செய்யக்கூடிய எப்சிஆர்ஏ லைசென்ஸ் உள்ளது. ஆனால், திரும்ப திரும்ப சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஓட்டு வேட்டை நடத்துகிறாரே தவிர எந்த இடத்திலும் உண்மையை பேசவில்லை.
மெட்ரோ
அடுத்து நெல்லையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜ என்ன செய்தது. கோவை, மதுரை மெட்ரோவுக்கு தடை பண்ணினார்கள் என அதே கதையை சுழற்ற ஆரம்பித்துள்ளனர். கோவை,மதுரைக்கு மெட்ரோ வேண்டும் என பாஜ கூறியுள்ளது. இபிஎஸ், பிரதமரிடம் மனு அளித்துள்ளார்.மதுரை, கோவைக்கு மெட்ரோ வருவது உறுதி.
நீங்கள் அனுப்பிய மெட்ரோ வரைவு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. அதனை சரி செய்து தாருங்கள் எனக்கூறியுள்ளது. இதனை திருப்பி அனுப்பினீர்களா என மக்கள் மன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். அந்த அறிக்கையை திருத்தி திருப்பி அனுப்பவில்லை. எனவே, திமுக, முதல்வர் ஸ்டாலினுக்கும் மெட்ரோ குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என நாங்கள் கருதுகிறோம். சொல்கின்றோம். தமிழக மக்கள் அப்படி நினைக்கின்றனர்.
தமிழ் ஆசிரியர்கள்
திமுகவின் கலாநிதி வீராசாமி பிஎம்ஸ்ரீ , கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் உள்ளனரா என கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, 46 கேந்திரா வித்யாலாயாவில் 40 பள்ளிகளில் தமிழ் படிக்க முடியும் என எழுத்துப்பூ்ரவமாக பதிலளித்து உள்ளார்.
அதிகாரப்பூர்வமாக திமுக எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளோம். ஆனால் தவறான திட்டமிட்டு, தகவலை தேர்தல் நேரத்தில் பரப்புகின்றனர். அந்த செய்தியை பார்க்கும் மக்கள் , பாஜ தமிழகத்துக்கு எதிராக இருக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும். இது குறித்தும் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளோம். செய்தி வெளியிட்டது தேர்தல் விதிமீறல். இது குறித்து தேர்தல் கமிஷனுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளார்.
18 பேர் போட்டி
கோவை தெற்குதொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜியை அனுப்பி உள்ளார் முதல்வர். கரூரில் முதல்வர் பேசும் போது, கரூரை எல்லாம் சுற்றி வளைத்துவிட்டார். எதையும் விட்டுவைக்கவில்லை. இப்போது கோவைக்கு சுற்றி வளைக்க அனுப்புகிறோம் என்று. ஆனால், கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 18 பேர் கரூரைச் சேர்ந்தவர்கள். கோவை தெற்கு தொகுதியில் 18 பேர் கரூரை சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள். அவர்களுக்கு இங்கு என்ன வேலை.
கோவையில் எந்தளவு அநியாயம் நடக்கிறது என்றால், செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில் 18 சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் என்றால், அவர்களுக்கு பாஸ் கிடைக்கும். பூத் ஏஜென்ட் நியமித்து கொள்ளலாம். இலவச பொருட்கள் கொடுக்கலாம். இந்த அமாவாசை காலத்து டெக்னிக்கை, 2026 சட்டசபை தேர்தலில் கரூரை சார்ந்திருக்கும் செந்தில்பாலாஜி, அவரது அடியாட்களை, கரூர் கட்சிக்காரர்களை கோவை தெற்கில் இறக்கிவிட்டுள்ளார்.
நியாயப்படி தேர்தல் கமிஷன் அடையாள அட்டை கொடுக்கும். இவர்கள் கோவையில் களமிறங்கி இலவசத்தை கொடுத்து அமைதியை கெடுக்க முயற்சி நடக்கிறது. இலவசத்தை கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க உள்ளோம்.
வருத்தமில்லை
பாஜ தலைவர் நிதின் நபீனுக்கு எழுதியதான கடிதம் பொய். நான் கடிதமே எழுதவில்லை. அனைத்தும் பொய். தேர்தலில் போட்டியிடவில்லை. பிரசாரம் செய்ய உள்ளேன் என கட்சியிடம் வேண்டுகோள் வைத்தேன். அதை தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நான் உட்பட அனைவரும் வேலை செய்ய உள்ளோம். நான் தேர்தலில் போட்டியிடாதது வருத்தமில்லை.
கன்னியாகுமரியில் பிரதமர்
நான் போட்டியிடாதாதல் எங்கும் தொய்வு இருப்பதை பார்க்கவில்லை. யாரும் அதிருப்தி இல்லை. அனைவரும் அவரவர் வேலை செய்கின்றனர். ஆதரவாளர், பாஜ தொண்டர்கள், முழுமையாக ஆதரவளித்து களத்தில் கட்சியினருக்கு வேலை செய்வார்கள்.தமிழகத்தில் எனது அரசியல் தொடரும். இதில் மாற்றமில்லை. ஏப்.,15ல் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்த சில நாட்களில் கோவை வர உள்ளார். தேதியை தலைவர்கள் அறிவிக்க அறிவிப்பார்கள்.
திமுக விளையாட்டு
கோவை திமுகவினர் செந்தில்பாலாஜியை தோற்கடிப்பார்கள். திமுகவின் விளையாட்டு என்ன என்று தெரியும். கோவையில் தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என செந்தில்பாலாஜி நினைக்கிறார். திமுக ஆட்சி அமைந்தால், தான் மட்டுமே அமைச்சர் பதவி பெற வேண்டும். வேறு யாரும் போட்டிக்கு வரக்கூடாது என நினைக்கிறார்.
அதனால், அவரும் தோற்பார். கோவையில் திமுக தோற்கும். அதை கோவை திமுகவினரே தோற்கடித்து காட்டுவார்கள். கோவை திமுகவினரை நம்பி போட முடியாமல், கரூரில் இருந்து வேட்பாளரை போட்டால், மானமுள்ள திமுகக்காரன் ஏற்றுக்கொள்வானா? கரூரில் இருந்து சுயேச்சையாக வந்து 18 பேர் கோவையில் போட்டியிடுவதை திமுகக்காரன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
செந்தில்பாலாஜியின் அட்டூழியத்தை திமுக ஏற்றுக் கொள்ளுமா என கேட்கிறேன். எல்லாமே வெளியில் இருந்து வந்தால், கோவையில் ஏன் கட்சி நடத்த வேண்டும். கோவையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அது எங்களின் எண்ணம். அதற்கு கடுமையாக உழைப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
