திருவனந்தபுரம்: “கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டத்தில் கூட எவ்வித முன்னேற்றமும் இல்லை” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் விமர்சித்தார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், “எல்டிஎஃப் அரசு கேரளாவுக்கு என்னதான் வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது? கண்ணூர் என்பது முதல்வரின் சொந்த மாவட்டம். அங்குள்ள பல கட்சித் தொண்டர்களிடம் நான் பேசினேன். இந்த மாவட்டத்துக்கு ஏதேனும் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் வந்துள்ளனவா என்று நான் அவர்களிடம் கேட்டேன். இந்த மாவட்டத்துக்காக எதுவும் செய்யப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
முதல்வரின் சொந்த மாவட்டமே வளர்ச்சியடையாத நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்” என்று கூறினார்.
