வழக்கு விசாரணையின்போது சிறையில் இருந்த 9 காவலர்களும் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள் என சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 பேரும் சிறையில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு கூறினார்.
அதில் “ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 9 பேரும் குற்றவாளிகள். இவர்களுக்கு தண்டனை வழங்குவது சம்பந்தமாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த மாதம் 30-ந்தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்” என நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் மத்திய, மாநில அரசின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படாததால் வழக்கின் தீர்ப்பு ஏப்.2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் தண்டனை விவரம் அறிவிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 6) இந்த வழக்கில் குற்றவாளிகளான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார்.
அதன்படி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து, சாமிதுரை ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வாசித்தபோது பேசிய நீதிபதி “கைது செய்யப்பட்ட போலீசாரால் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு கட்ட இயலாது. வெறும் ஆயுள் தண்டனை வழங்கினால் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் இருக்காது.” என்று தெரிவித்தார்.
