தலைநகர் டெல்லி சட்டமன்ற வளாகத்திற்கு கார் ஒன்று அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இன்று (06-04-26) டெல்லி சட்டமன்ற வளாகத்தின் 2வது நுழைவு வாயில் அருகே அடையாளம் தெரியாத கார் ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.
அதனை தொடர்ந்து அந்த காரை ஓட்டிய மர்ம நபர், வளாகத்திற்குள் காரை நிறுத்தி சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் காரில் அமர்ந்து ஒரு பூங்கொத்தை உள்ளே வைத்துவிட்டு, அதன் பின்னர் அவரது வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். மிகுந்த பாதுகாப்பு கொண்ட சட்டமன்றத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வாகனத்துடன் அத்துமீறி நுழைந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் உத்தரப் பிரதேச பதிவு எண் கொண்ட டாடா சியரா கார் என்றும், நுழைவாயில் எண் 2 வழியாக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஐந்து நிமிடங்களுக்குள் அதே நுழைவாயில் வழியாக வெளியேறியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
அங்கு விட்டுச் சென்ற பூங்கொத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, அந்த வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் வாகனத்தைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர். விசாரணையில் அந்த மர்ம நபர் சரப்ஜீத் சிங் எனவும் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் அவரோடு மேலும் இருவரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
