திருச்சி: ‘‘காங்கிரஸ்- திமுகவிற்கு இடையே உட்கட்சி பூசல், கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: இன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2ஏ தேர்வு சென்னையில் ஏற்பட்ட ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையம் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதை தெரியாமலேயே 171 பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். நிர்வாக திறன் அற்ற அரசு தான் திமுக. டிஎன்பிஎஸ்சி தேர்வு என்பது முக்கியமானது ஆகும். அந்தத் தேர்வை கூட இந்த அரசு சரியான முறையில் நடத்த கூட முடியாத அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.
உட்கட்சி பூசல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு இன்னும் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை கூட கொடுத்திருக்கிறது. உரிய காலத்திற்குள் மாநில அரசு சட்ட ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியிருக்கிறார்கள். தீர்ப்பு வந்த பிறகும் கூட ஒருவரை சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபியாக நியமிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு திறமையற்ற அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ்- திமுகவிற்கு இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
கூட்டணி
கருத்து வேறுபாடு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள், அதற்கு எதிராக திமுகவினர் ஒரு கருத்தை சொல்கிறார்கள். விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதானே? இதில் வெளிப்படையாக பேச முடியவில்லையே? ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வரும் போது வெற்றி பெறுவதற்காக அமைக்கப்படுவது தான் கூட்டணி. எல்லாக் கட்சிகளுமே கூட்டணி அமைத்து தான் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. கால சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைவது இயல்பு.
தேர்தல் முடிந்தால் தான் யார் ஜெயிப்பார்கள்? யார் தோற்பார்கள்? என்று தெரியும். அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கும் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக உடன் கூட்டணிக்கு சில கட்சிகள் வரும் என்று சொல்லி இருந்தேன். தற்போது வந்துவிட்டது. முதலில் பாமக வந்தது. பிறகு அமமுக வந்தது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம், வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மிட்டாய் கொடுத்து …
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் என்ன இருக்கிறது? ஆசிரியர்கள் கேட்ட கோரிக்கை என்ன? அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டார்கள், ஆனால் முதல்வர் ஸ்டாலின் பங்களிப்பு உடைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறார். இதுவே அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையே?
ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை செய்து அறிவித்து இருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு குழந்தை அழுதால் மிட்டாய் கொடுத்து சரி செய்வது போல், போராட்டத்தை தொடங்கிய உடன் ஒரு சின்ன அறிவிப்பு கொடுத்து சரி செய்து இருக்கிறார்கள். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
