புதுச்சேரி: பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்,''

புதுச்சேரி: பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்,” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரியில் நடந்த பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் ஒன்றாக தேர்தல் நடக்கும். ஆனால், இம்முறை முன்கூட்டியே இங்கு நடக்கிறது. தேதியை மாற்றுவதால், நம்முடைய உணர்வை மாற்ற முடியுமா?

தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுஎன்பது திராவிட மாடல் அமையும் என்பதை விரும்புகின்றனர்.டில்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு தலையாட்டும் அடிமை கூட்டத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை. அதே உணர்வுதான் புதுச்சேரி மக்களிடம் இருக்கிறது.

பாஜ அரசியல் மாண்புகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. இவர்கள் செய்யும் அட்டூழியத்தால், புதுச்சேரி பாரம்பரியத்தை இழந்து வருகிறது.அழகான புதுச்சேரியில் அலங்கோலமான என்டிஏ ஆட்சி நடத்த அனுமதிக்கலாமா புதுச்சேரி மாநிலம் ஆக வேண்டும் என்பது கோரிக்கை. 16 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசுக்கு மனம் இல்லை. இல்லை என்று சொல்லி கையை விரித்துவிட்டனர்.பாஜவை பொறுத்தவரை, தமிழகம் போன்ற மாநிலங்களை நகராட்சிகளாக மாற்ற விரும்புகின்றனர்.

புதுச்சேரியை ஊராட்சி போன்று நடத்துகின்றனர்.அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?சட்டசபைக்கு மாண்பு இருக்கிறதா? முதல்வருக்கு மரியாதையாவது இருக்கிறது.இங்கு ஆள் இன் ஆள் ஆளுநர்.

ஆளுநர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்துள்ளனர். சாமானிய மக்களை வாழ விடுவார்கள். இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மக்களாட்சியை காக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

நீங்கள் தேர்வு செய்யும் அரசு, உங்களுக்காக சேவை செய்யும் அரசாக இருக்க வேண்டும். டில்லிக்கு தலையாட்டும் அரசாக இருக்கக்கூடாது.புதுச்சேரியில் ஆரம்ப கல்வியிலேயே சிபிஎஸ்இ கல்வியை கொண்டு வந்து தாய்மொழிக் கல்வியை அழித்துள்ளது ரங்கசாமியின் கூட்டணி அரசு.என்டிஏ கூட்டணி தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான கூட்டணி. இவர்களை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா?சிறந்த புதுச்சேரியை உருவாக்குவோம் என பிரதமர் மோடி சொன்னார். ஆனால், மோசமான புதுச்சேரி மாறியிருக்கிறது.டபுள் இன்ஜீன் அரசால் புதுச்சேரி வளர்ந்துள்ளது என அமித்ஷா கூறினார். எங்கே வளர்ந்துள்ளது. கடலுக்கு அந்தப்பக்கமா? பதுக்கல்காரர்களின் புகலிடமாக புதுச்சேரியையை உருவாக்கினது தான் என்ஆர் காங்கிரஸ் பாஜ கூட்டணி வளர்ச்சியா?

தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்து மக்களுடன் விளையாடி இருக்கின்றனர். போலி மருந்து தயாரித்த முக்கிய குற்றவாளிகள் சிக்கினர். ஆனால், விசாரணை முடக்கப்பட்டது. இதுதான் டபுள் இன்ஜினின் லட்சணம். புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கை மாநில அந்தஸ்து. அதைப்பற்றி அவர்கள் பேசவில்லை. அவர்களுக்கு தேவைஎன்றால் மாநிலத்தை உடைத்து புது மாநிலத்தை உருவாக்குவார்கள். ஆனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாதா? இவ்வளவு நடந்த பிறகும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லை என்றால், மக்களை ஏமாற்ற வருகிறார் என்றால், எந்த முகத்தை வைத்து கொண்டு ஓட்டு சேரிக்க வருகின்றனர்.

கள்ளச்சாராய வியாபாரிகள் கைகளில் புதுச்சேரி சிக்கி தவிக்கிறது. போதைமருந்து தாராளமாக விநியோகம் செய்கின்றனர். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆசிரியர்கள் போராடுகின்றனர். இவ்வளவுக்கு பிறகும் பிரதமரை அழைத்து வந்து ரோடு ஷோ நடத்துகிறீர்களே. வெட்கமாக இல்லையா? தமிழகத்துக்கு கிடைத்த அடிமை இபிஎஸ் போன்று, புதுச்சேரியில் ரங்கசாமி உள்ளார். இண்டி கூட்டணியை விமர்சித்த ரங்கசாமி, தனது முதுகை பார்த்தாரா?புதிதாக கட்சியை சேர்த்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்று சொன்ன ரங்கசாமி 24 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டார். இதுதான் அடிமை மனோபாவம்.தனி மனிதர்கள் பலவீனம் அடைவார்கள். கருத்தியல் மட்டும் தான் நிலைத்து நிற்கும். பீஹாரில் நிதிஷ்குமாரை நினைத்து பாருங்கள். அவரது நிலை உங்களுக்கு வராது என்பதற்கு என்ன நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

Source link