– டில்லி சிறப்பு நிருபர் –
பாமக தலைவர் அன்புமணிக்கு வழங்கப்பட்ட மாம்பழ சின்னத்தை முடக்கக் கோரி, அக்கட்சி நிறுவனர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்’ என, உத்தரவிட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணிக்கு இடையிலான மோதலை அடுத்து, அக்கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னமான மாம்பழத்தை உரிமை கொண்டாடி, இரு தரப்பினரும் தலைமை தேர்தல் கமிஷனிடம் முறையிட்டனர். இறுதியில், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கப்பட்டது. பாமகவின் தலைவராகவும் அவரை அங்கீகரித்தது. இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடாமல், உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்’ என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாக, சின்னத்திற்கு தடை விதிக்க வேண்டும். மாம்பழம் சின்னத்தை பொறுத்தவரை, அது ஒரு கட்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னமாக இல்லாமல், இலவச சின்னங்கள் பட்டியலில் உள்ளது. அப்படி இருக்கும் போது, யார் முதலில் வருகின்றனரோ, அவர்களுக்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை தர வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது: அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், இலவச சின்னங்கள் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் மாம்பழ சின்னம், ஒரு தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்குள் பிரச்னை வந்தால், மாம்பழ சின்னம் முடக்கப்படும் என தேர்தல் கமிஷன் சொல்லி இருந்தது. உங்களுக்கு சின்னம் வேண்டும் என்பதைவிட, அதை முடக்க வேண்டும் என்பதே உங்கள் பிரதானமான கோரிக்கையாக உள்ளது. தந்தைக்கு பின், மகன் கட்சியை வழிநடத்துவார் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இங்கு, மகனுக்கு சின்னத்தை கொடுக்கக் கூடாது என தந்தை நீதிமன்றத்தை நாடியுள்ளார். இனி, இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
