“மீண்டும் திமுக ஆட்சி அமையும்” – திருமாவளவன் நம்பிக்கை

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பானை சின்னத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார்.

இவர் இன்று (06-04-26) காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

இதனைதொடர்ந்து செய்திளார்களிடம் பேசிய திருமாவளவன், “காட்டுமன்னார்கோவில் தொகுதியில், தேசிய அளவில் புகழ் பெற்ற சமூகநீதி போராளி இளையபெருமாள் இளைய மகன் ஜோதிமணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை நிலவுகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். அரசின் சாதனைகள், திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவை இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள இல்லத்தரசிகளுக்கான 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தேர்தல் வாக்குறுதியாக மட்டுமில்லாமல், எதிர்கால வளர்ச்சிக்கான அறிவியல் ரீதியான திட்டமாகவும் அமைந்துள்ளது” என அவர் தெரிவித்தார். மருத்துவம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதை மக்கள் உணர்ந்துள்ளதால், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.

.

Source link