அவேஷ் கான் செய்தது சரியா * லக்னோ அணிக்கு சிக்கல்

ஐதராபாத்: அவேஷ் கான் செயல் காரணமாக, லக்னோ அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில் லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அடுத்த இரு பந்துகளில் ரன் எடுக்காத லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், 5வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, 5 விக்கெட்டில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

அப்போது, பவுண்டரி எல்லையில் இருந்த லக்னோ அணி வீரர் அவேஷ் கான், உற்சாக மிகுதியில் பந்து பவுண்டரியை கடக்கும் முன், கையில் இருந்த பேட்டினால் பந்தை அடித்து மைதானத்திற்குள் தள்ளினார். கிரிக்கெட் விதிப்படி, போட்டி நேரத்தில் மைதானத்துக்கு வெளியில் இருந்து யார் ஒருவர் தலையீடு செய்தாலும், அப்போது வீசப்பட்ட பந்தை ‘டெட் பால்’ என அறிவிக்க வேண்டும்.

மைதானத்தில் பல கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதும், அம்பயர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை போல. தவிர ‘ஒருவேளை இது தண்டனைக்கு உரிய தவறு அல்ல,’ என நினைத்து ஐதராபாத் அணியினரும் உடனடியாக கண்டு கொள்ளாமல் விட்டனரா எனத் தெரியவில்லை. தொடரின் நிர்வாக குழுவில் இருந்தும், ‘இது விதி மீறலா, அல்லது அவேஷ் கானுக்கு அபராதம் விதிக்கப்படுமா,’ என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.

ஒருவேளை சம்பவம் நடந்த நேரத்தில், இதை கவனித்து அப்பீல் செய்திருந்தால், லக்னோ அணி 2 பந்தில் 1 ரன் என விளையாடி இருக்க வேண்டும். இதனால் போட்டியின் முடிவு கூட மாறியிருக்கலாம்.

இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், ஐதராபாத் தரப்பில் இந்திய கிரிக்கெட் போர்டிடம் முறைப்படி புகார் செய்ய உள்ளனர்.


வருவாரா ஹசரங்கா

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஹசரங்கா 28. ‘டி-20’ உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தொடை பின்பகுதியில் காயம் (பிப். 8) ஏற்பட்டது. இவரை ரூ. 2 கோடிக்கு லக்னோ வாங்கியது. தொடர் துவங்கி இரு வாரம் ஆன போதும், ஹசரங்கா இன்னும் அணியில் இணையவில்லை. ‘பிட்னஸ்’ இல்லாததால் இலங்கை அணி தரப்பில், அனுமதி வழங்கவில்லை. இவர் வராத பட்சத்தில் முஜீப் அர் ரஹ்மான், முகமது நபி, லியாம் டாசன் என யாராவது ஒருவரை லக்னோ வாங்கலாம்.

Source link