அவிநாசி : அவிநாசி தொகுதியில், பா.ஜ. வேட்பாளர் முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ”கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என ‘நிதி’களால் ஒரு குடும்பம் மட்டும் வளர்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
மத்திய இணையமைச்சர் முருகன், திருப்பூர் மாவட்டம், அவிநாசி(தனி) தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக களம் காண்கிறார். அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, அ.தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் அம்பாள் பழனிசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, சேவூர் ரோடு பாலசந்தர் மருத்துவமனை பிரிவிலிருந்து திறந்தவெளி வேனில் தொண்டர்கள் புடை சூழ, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக, தாலுகா அலுவலகம் வரை வந்தார். முன்னதாக, முருகன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சுவாமி தரிசனம் செய்தனர்.
மனு தாக்கல் செய்த பின், முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி ஆசியுடன், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆசியுடன், அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். அவிநாசி தொகுதியில், 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், பா.ஜ. வெற்றி பெறும். பிரதமரின் வளர்ச்சி திட்டங்கள், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது போன்றவை பக்கபலமாக உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசு எந்த ஒ
ரு நலத்திட்டங்களையும் இந்த தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல; தமிழக மக்களுக்கும் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்தவர்கள், தற்போது 30 ஆயிரம் ரூபாய் செலுத்தும் நிலை உள்ளது.மக்கள் கோபத்தில் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள், கஞ்சா, மது போன்றவற்றால் குற்றங்கள், கொலைகள் அதிகரித்துள்ளது. பிஞ்சு குழந்தைகள், சிறுமிகள், மூதாட்டி என அனைவருமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். சட்டம் – ஒழுங்கு துறையை தன்வசம் வைத்துள்ள ஸ்டாலின் கைப்பாவையாக உள்ளார்.
முதலில் கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், அதற்கடுத்து உதயநிதி, அதன்பின், இன்பநிதி. இந்த நிதிகளுக்கெல்லாம் அடுத்த நிதி ஒருவர் வருவார். ஒரு குடும்பம் மட்டுமே இந்த நிதிகளால் வளர்ந்து கொண்டுள்ளது. ஐந்து ஆண்டு தி.மு.க. ஆட்சியில், அவர்களின் குடும்பத்தின் வளமை, செல்வமும் தான் வளர்ந்துள்ளது. அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்றவுடன் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் அனைத்து குளங்களும் இணைக்கப்பட்டு, திட்டம் 2.0 முழுமையாக முடிக்கப்படும்.சேவூர் நிலக்கடலைக்கு ஜியோடேக் எனப்படும் புவிசார் குறியீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு என பிரத்யேக திட்டங்கள் இந்த தொகுதிக்கு அறிவிக்கப்படும். ‘2ஜி’ குறித்து ராஜா பேசிய ஆடியோ வெளியாகியும் அதனைப்பற்றி யாரும் பேசவில்லை. அந்த ஊழல் பணத்தை வைத்து அவிநாசி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அதனை, மக்கள் புறக்கணிப்பார்கள்.இவ்வாறு முருகன் கூறினார்.
