ஈரானை ஒரே இரவில் அழிக்க முடியும்: டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: ” ஈரானை ஒரே இரவில் அழிக்க முடியும். அந்த இரவு நாளையாக கூட இருக்கலாம்,” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 15 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார். ஆனால், ஈரான் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த வேண்டும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் அவகாசம் கொடுத்திருந்தார். இரண்டு முறை இதை நீட்டித்தார். அதன்படி, இன்று மாலையுடன் இது முடிவடைவதாக இருந்தது. மேலும், 24 மணி நேரத்துக்கு அவகாசத்தை நீட்டிப்பதாக டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் கூறியிருந்தார். இதனை ஈரான் கிண்டல் அடித்து இருந்தது.

மேலும், மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், 45 நாள் போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட வரைவு திட்டம் அமெரிக்கா மற்றும் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து குதித்த அமெரிக்க வீரர் பாராசூட்டில் குதித்து தப்பித்தார். அவரை அமெரிக்க விமானப்படைகள் பாதுகாப்பாக மீட்டன.

பெருமை

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஒட்டுமொத்த நாடும் ஒரே இரவில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த இரவு நாளை இரவாக இருக்கலாம். ஈரானில் சிக்கிய அமெரிக்க ராணுவ வீரரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ளோம். ராணுவம் இதுவரை மேற்கொண்ட மிகப்பெரியதும், மிகவும் சிக்கலானதுமான பதற்றம் நிறைந்த தேடுதல் வேட்டையின் வெற்றியை கொண்டாட இங்கு நாம் கூடியிருக்கிறோம். ஒரு வீரரை மீட்க 200 வீரர்கள் அனுப்பப்படுவது என்பது எளிதில் முடியாத விஷயம்.

வழக்கமாக யாரும் அவ்வளவு எளிதில் செய்ய துணிய மாட்டார்கள். இந்த பணியில் எங்களுக்கு பலரும் சிறந்த மனிதர்கள் உதவினர். இந்தப் பணியில் ஈடுபட்டது எங்களுக்கு கிடைத்த பெருமை. இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு. வரலாற்றில் இடம்பெறக்கூடிய மீட்பு நடவடிக்கையாகும். ஒட்டுமொத்த நாடே ஒரு இரவில் அழித்து ஒழிக்கப்படக்கூடும். அந்த இரவு ஒரு வேளை நாளை இரவாகக்கூட இருக்கலாம்.

ஈரானில் சிக்கிய வீரரை மீட்கும் நடவடிக்கை 7 மணி நேரத்தில் முடிவடைந்தது. அமெரிக்காவிடம் உள்ள கருவிகள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஈரானின் மையப்பகுதிக்குள் சென்று விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். எந்த அமெரிக்கரையும் விட்டு விட மாட்டோம். அந்த வீரருக்கு காயம் ஏற்பட்டாலும், தனக்கு தானே சிகிச்சை எடுத்துக் கொண்டார். போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சி130 ஹெர்குல்ஸ் விமானம் கிளம்புவதில் ஈரமான மண் தடுத்தது. அந்த பழைய விமானங்களை நாங்கள் குண்டுவீசி அழித்துவிட்டோம். அதனை ஈரானியர்கள் அழிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்தும், வீரர் அங்கு மாட்டிக் கொண்டது குறித்தும் அமெரிக்காவில் உள்ள சிலர், ஈரானுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவோம். அவர்கள் சிறையில் தள்ளப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link