45 நாள் போர் நிறுத்த வரைவு திட்டம் அமெரிக்கா, ஈரானிடம் ஒப்படைப்பு; பாக்., எகிப்து, துருக்கி கூட்டு முயற்சி

இஸ்லாமாபாத்:மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், 45 நாள் போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட வரைவு திட்டம் அமெரிக்கா மற்றும் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது.

போர் நிறுத்தம் செய்ய மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது, 45 நாள் போர் நிறுத்தம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. இந்த வரைவு திட்டம், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழி காண, இந்த 45 நாள் கால அவகாசம் போதுமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும், இந்த வரைவு திட்டங்களை இரு கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில், உடனடி போர் நிறுத்தம் அமலுக்கு வரும். இரண்டாவது கட்டத்தில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படும். ஈரானின் உயர் செறிவு யுரேனியம் கையிருப்பு, அணு சக்தி திட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் இறுதி ஒப்பந்தத்தில் மட்டுமே விவாதிக்கப்படும் என வரைவு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link